தமிழ்நாடு பாஜகவில் இருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா 2வது முறையாக கட்சியில் இருந்து கடந்த 20ம் தேதி நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து திருச்சி சூர்யா சிவா, பாஜக மீதும், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் சூர்யா சிவா இன்று காமெடி நடிகர் சந்தானத்தின் வீடியோ ஒன்றை பதிவிட்டு, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தற்போது அந்த ட்விட்டர் பதிவு அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 


என்ன பதிவிட்டார் சூர்யா சிவா..? 


உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன,என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம். என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா அண்ணாமலை..? 






அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும். அதிகபட்சம் அமர் பிரசாத்தையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே...எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்...” என பதிவிட்டுள்ளார். 


சூர்யா சிவா நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன..? 


சூர்யா சிவா நீக்கப்பட்டது குறித்து பாஜக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர்  திருச்சி S.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.






முன்னதாக  கடந்தாண்டு நவம்பர் மாதம் பாஜக பெண் நிர்வாகி டெய்சி சரணுடனான கருத்து மோதலின்போது அவதூறாக பேசியதாக சூர்யா சிவா நீக்கப்பட்டார் அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் நீக்கப்பட்டுள்ளார்.