கரூரில் குற்றத்தடுப்பு பணிக்கு 4 புதிய ரோந்து வாகனங்களை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தொடங்கி வைத்தார். ரோந்து வாகனங்கள் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கரூர் நகர உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விரைந்து செயல்படுவதற்காக மேலும் 4 புதிய நான்கு சக்கர ரோந்து வாகனங்களை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் மற்றும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கரூர் மாவட்டத்தில் 3 காவல் உட்கோட்டங்களில் 17 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. காவல் நிலையங்களில் குற்றத் தடுப்பு பணிக்காகவும், சாலை விபத்து, மனு விசாரணை, 100 அவசர உதவி தொலைபேசி எண்ணிற்கு அழைப்புக்கு செல்வது போன்ற சட்டம் ஒழுங்கு பணிகளுக்கு கடந்த ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் நகர உட்கோட்டத்தில் உள்ள கரூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எண் 1 ரோந்து வாகனமும், வெங்கமேடு, வாங்கல் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எண் 2 ரோந்து வாகனமும், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எண் 3 ரோந்து வாகனமும், வெள்ளியணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எண் 4 ரோந்து வாகனமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
பின்னர் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: "ரோந்து போலீசாரை அதிகப்படுத்தும் விதமாகவும், 24 மணி நேரமும், 3 ஷிப்டுகளாக சைரன் மற்றும் ஒளிரும் விளக்குகளுடன் ரோந்து பணி செய்ய ஏதுவாகவும் ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து, அவசர அழைப்பு உள்ளிட்ட எந்தவொரு சம்பவமாக இருந்தாலும் உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்க முடியும்.
சென்னை மாநகரில் எவ்வாறு காவல்துறை ரோந்து வாகனங்கள் இருக்கிறதோ, அதேபோல் கரூர் மாவட்டத்திலும் ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திருநங்கைகளுக்கான வாழ்வாதார முன்னேற்றத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் வேறுவகையில் செல்லும் போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும். மாவட்ட நிர்வாகமும் அதைதான் நினைக்கிறது. காவல்துறையும் அதற்கு இணக்கமாக இருக்கும்.
கரூரில் நடந்த சம்பவத்திற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ, உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பொறிவைத்து பிடிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.