அரியலூரில் எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள் நிறைந்துள்ளதாகவும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’திமுக ஆட்சியில் தமிழக தொல்லியல் துறை மறு மலர்ச்சி கண்டுள்ளது. கலிங்க சிற்பங்கள், மாளிகை மேடு என எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்களாகக் காணப்படும் மாவட்டம் அரியலூர். இங்கு கனிம வளங்களும் நிறைந்துள்ளன.
அரியலூர் போன்றே பெரம்பலூரிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் அமைந்துள்ளன. கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அரியலூர் மற்றும் பெரம்பலூரில் புதை படிம பூங்காக்கள் அமைக்கப்படும்.
இன்று காலை என்னிடம் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளின் அடிப்படையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள் சேதமாவதை தடுக்கும் பொருட்டு, சிமெண்ட் காரிடர் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதையும் நான் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
அரியலூர் - மழவராய நல்லூர் சாலையில் மருதையாற்றின் குறுக்கே புதிய பாலம், தேளூர் ஊராட்சியில் நெல் சேமிப்பு மையம் அமைப்பது எனப் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தித் திட்டத்திற்காக 13 வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட 11 கிராமங்களில் உள்ளடங்கிய நிலங்களை, மீண்டும் உரிய உடமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 306 உடமையாளர்களின் விபரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உறுதிமொழி ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள மேலூர் மற்றும் இலையூர் மேற்கு ஆகிய 2 கிராமங்களுக்கும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடமையாளர்களிடம் ஒப்படைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரியலூர் - பெரம்பலூர் மாவட்டப் பகுதியில் 10 கோடி ரூபாய் செலவில் புவியியல் புதைபடிவப் பூங்கா அமையப் போகிறது. அரியலூர் நகரில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எல்லாத் துறைகளின் சார்பிலும் இன்றைக்கு நடைமுறையில் இருந்து வரக்கூடிய அல்லது திட்டமிடப்பட்டு வரும் அனைத்துப் பணிகளையும் சொன்னால் பல மணிநேரம் ஆகும்.
இதில் அரியலூர், பெரம்பலூர் என அனைத்து மாவட்டங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பயன்பெற வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி, மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம்.’’
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ்.கார்த்திக்குக்கு ,குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு வழங்கினார்.