`தீபாவளி பண்டிகையின் போது, அனைத்து தடங்களிலும் அரசுப் பேருந்துகளும், சிறப்புப் பேருந்துகளும் சீராக இயக்கப்படும்’ எனக் கூறி டயர் பற்றாக்குறை தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம். 


தமிழக அரசுப் பேருந்துகளில் கடுமையான டயர் பற்றாக்குறை நிலவுவதாகவும், உடனடியாக டயர்கள் வாங்கப்பட்டு, மாற்றப்படாவிட்டால் தீபாவளி பண்டிகையின் போது பெரும்பாலான பேருந்துகளை இயக்க முடியாது என்ற ரீதியில் சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில் அவர், ` உடனடியாக டயர்கள் வாங்கப்படாவிட்டால், 40%  பேருந்துகளை தீப ஒளிக்கு இயக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது உண்மையானால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என்று யூகத்தின் அடிப்படையில் குறிப்பிட்டிருந்தார். 



மேலும் அன்புமணி ராமதாஸ், `போதிய டயர்கள் இல்லாததால் அரசுப் பேருந்துகளில் ரீ-ட்ரெட் செய்யப்பட்ட டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தேய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது’ என்றும் இந்த விவகாரம் குறித்து கூறியிருந்தார். தொடர்ந்து, `அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 34,000 டயர்கள் வாங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இதுவரை வாங்கப்படாததே சிக்கலுக்குக் காரணம். உடனடியாக டயர்களை வாங்கி, பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்றும் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கித் தனது பதிவை நிறைவு செய்திருந்தார் அன்புமணி ராமதாஸ். 


டயர்கள் பற்றாக்குறையில் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழகப் போக்குவரத்துத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுப் போக்குவரத்துக் கழகத்தில் டயர் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுவது, தீபாவளிக்குத் தடையில்லா போக்குவரத்துச் சேவை நடைபெறாது எனவும் கூறப்படும் விவரங்களும் உண்மைக்குப் புறம்பானது எனக் கூறியுள்ளது தமிழகப் போக்குவரத்துத்துறை. 



மேலும் இந்த அறிக்கையில், புதிய டயர்கள், ரீ-ட்ரெடிங் செய்யும் பொருள்கள் ஆகியவை தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதாகவும், தீபாவளி பண்டிகைக்குத் தடையின்றி பேருந்துகளை இயக்க முடியும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது போக்குவரத்துத்துறை. கடந்த மே மாதம் முதல் தற்போது வரை, 15,997 டயர்கள் போக்குவரத்துத்துறை சார்பில் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் 1000 புதிய டயர்கள் போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


பழைய டயர்களை ரீ-ட்ரெட் செய்வதற்காகத் தேவைப்படும் டிரெட் ரப்பர், பிணைப்பு கோந்து, பிவிசி ஆகியவையும் போதுமான அளவுகளில் இருப்பதாகவும் போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளி பண்டிகையின் போது அனைத்துப் பேருந்துகளும், சிறப்புப் பேருந்துகளும் சீராக இயங்கும் என தெளிவுபடுத்தியுள்ளது தமிழகப் போக்குவரத்துத் துறை.