ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாகேப் பால்கே விருது  வழங்கப்பட்டது. 45 ஆண்டுகள் கலை சேவைக்காக அவருக்கு இந்த விருதை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினியிடம் வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட பின் பேசிய ரஜினிகாந்த், தான் பெற்ற விருதை தன்னுடைய குருவுக்கும், பெற்றோருக்கும் சமர்பித்தார். குறிப்பாக ரஜினி நடத்துனராக இருந்த போது, அவருடன் வேலை பார்த்தவரும் பேருந்து ஓட்டுநருமான ராஜ் பகதூருக்கும் இந்த விருதை சமர்பிக்கிறேன் என தெரிவித்தார்.  தன்னை நடிக்கக் கூறி வற்புறுத்தியவரே அவர்தான் என ஒற்றை வரியில் முடித்தார் ரஜினி. சூப்பர் ஸ்டார் என இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகனின் பயணம் சக ஊழியரால், ஒரு நண்பனால் உந்தப்பட்டது என்பதே ஒரு நெகிழ்ச்சியான கதைதான். 


மத்திய அரசின் விருது விழா மேடையில் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு ரஜினிக்கு அவர்  நண்பர் ராஜ் பகதூர் செய்தது என்ன என இந்தியாவே தேடியது. ஏற்கெனவே பலருக்கும் பரீட்சியமானவர் என்றாலும் கடந்த இரண்டு நாட்களில் இந்தியா முழுவதும் சென்றடைந்தார் ராஜ் பகதூர். இந்த அழகான தருணம் குறித்தும் ரஜினி குறித்தும் Indian Express-க்கு பேசிய ராஜ் பஹதூர், ''அப்படியான ஒரு மேடையில் விருது வாங்கும் போது என் பெயரைக் குறிப்பிட வேண்டிய தேவையே இல்லை. ஆனாலும் என் பெயரைக் குறிப்பிடுகிறார் என்றால் அதுதான் ரஜினி. அதுதான் ரஜினியின் நேர்மை, அவரின் பணிவு. அவர் வந்த பாதையை அவர் மறந்ததே இல்லை. அவரை தூக்கிவிட்டவர்களை அவர் கைவிட்டதே இல்லை.எப்போதும் பெங்களூரு வந்தாலும் நண்பர்களை காண ஓடி வருகிறார் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.




ரஜினி நாடகத்தில் நடித்த போது,  அவர் அதோடு நின்றுவிடக்கூடாது என நினைத்த ராஜ் பகதூர், அப்போதைய சென்னையான மெட்ராஸை நோக்கி போ எனக் கூறி இருக்கிறார். உனக்கு சரியான இடம் மெட்ராஸ் ப்லிம் இன்ஸ்டிடியூட் என கைகாட்டிய ராஜ், அங்குதான் உனக்கான வாழ்க்கை இருக்கிறது என அழுத்தமாக கூறியுள்ளார். ஆனால் ரஜினிக்கு தயக்கமே முன்னால் வந்து நின்றுள்ளது. ராஜ் பகதூரின் தொடர் அழுத்தம் காரணமாக மெடிக்கல் லீவ் போட்டுக்கொண்டு சென்னை கிளம்பினார் ரஜினி. அன்று கிளம்பி சென்னை மண்ணை மிதித்த ரஜினிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் தானே சூப்பர் ஸ்டார் என்று. மெடிக்கல் லீவ், அவ்வப்போது கண்டக்டர் வேலை என இரண்டு வருடம் கர்நாடகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மாறி மாறி ஓடியுள்ளார் ரஜினி. அந்த ஓட்டம் தான் இன்று ரஜினியை மத்திய அரசு விருது வாங்க வைத்துள்ளது. 


நடிப்புப் பயிற்சியில் ரஜினியின் நாடக நடிப்பை பார்த்த கேபாலசந்தர், ரஜினியை கூப்பிட்டு தமிழ் கத்துக்கோ எனக் கூறிவிட்டு சென்றுவிட்டாராம். ரஜினியின் வாழ்வில் ஒளியை உணர்ந்த ராஜ் பகதூரே ரஜினிக்கு தமிழையும் கற்றுக்கொடுத்துள்ளார்.  மிக விரைவாக தமிழ் கற்றுக்கொண்ட ரஜினி பாலச்சந்தரை சந்தித்து தமிழில் பேசி அசரடித்துள்ளார். ரஜினியின் தமிழ் உச்சரிப்பை பாரத்து அசந்த கேபாலச்சந்தர் அவரை அபூர்வ ராகங்கள் படத்தில் களம் இறக்கினார். அதன்பின்னர் ரஜினியின் சினிமா பயணம் ஊர் அறிந்ததே.