பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகை:
இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள்.
ஆண்டுதோறும் வரும் தை மாதம் 1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல். அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்:
இது ஒரு புறம் இருக்க, பொது மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை முதல் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வாருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது. ஜனவரி 12 ஆம் தேதி சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 1,260 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,94,880 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஜன்வரி 13 ஆம் தேதி தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளில் 1,071 பேருந்துகளும், 1,901 சிறப்புப் பேருந்துகளில் 658 பேருந்துகளும் இயக்கப்பட்டு 85,131 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
6.54 லட்சம் பயணிகள்:
2 நாட்களில் மொத்தமாகச் சென்னையிலிருந்து 5,089 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,80,011 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் நேற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மொத்தமாக தற்போது வரை 6.54 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 2.44 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக மக்கள் முன் பதிவு செய்து வருகின்றனர். பேருந்துகளில் மட்டுமல்லாமல் சொந்த வாகனங்கள், ரயில் மற்றும் பிற போக்குவரத்து மூலம் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.