பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் இப்போது 'மனிதநேயம்' பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் பாரதிய கலாசாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற 'உயிர்மைநேயத்தை' வலியுறுத்தி கொண்டே இருக்கிறது. அதனை நமக்கு உணர்த்தும் பண்டிகைதான் பொங்கல் பண்டிகை.
விவசாயம் இல்லாவிட்டால் மனித வாழ்வு இல்லை. சூரியன் இல்லாவிட்டால் எந்தப் பயிரும் விளையாது. விவசாயமே இருக்காது. உலகமே இயங்காது. இப்படி மனித வாழ்வு செழிக்க, உலகம் இயங்க முழுமுதற் காரணமாக இருக்கும் சூரியனுக்கு பொங்கல் வைத்து கடவுளாக வணங்கும் பண்டிகை தான் பொங்கல். ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் விவசாயத்திற்கு அடிப்படை. எனவே, கால்நடைகளுக்கு நன்றி செலுத்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரு நாளையே நம் முன்னோர்கள் ஒதுக்கியுள்ளனர்.
இந்துக்கள் மட்டும் கொண்டாடி வந்த 'உயிர்மைநேய' பண்டிகையான பொங்கல் பண்டிகை இப்போது அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் பண்டிகையாக மாறியிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், பொங்கல் பண்டிகையின் அடிப்படையான, சூரியனை கடவுளாக தத்துவத்தை அகற்றி அதை வெறும் கொண்டாட்டமாக மட்டும் சுருக்க சில சக்திகள் சுருக்க முயற்சித்து வருகின்றன. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, ஜல்லிக்கட்டு இந்து ஆலயங்களைச் சார்ந்து நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்கவும் சதி நடந்து வருகிறது. இவற்றையெல்லாம் மக்கள் முறையடிப்பார்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.