பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. கரூர் - திருச்சி இடையே ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருச்சி வரை டிக்கெட் பெற்றிருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கரூர் - திருச்சி மார்க்கத்தில் லாலாபேட்டை முதல் குளித்தலை வரையிலும், பேட்டவாய்த்தலை முதல் பெருகமணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பாலக்காடு முதல் திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் மதியம் 12.20 மணியளவில் கரூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. அந்த ரயில் கரூர் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
கரூர் முதல் திருச்சி வரை ரத்து செய்யப்பட்டது. மறு மார்க்கத்தில் திருச்சிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணியளவில் புறப்படும் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு திருச்சி வரை டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
கரூர் ரயில் நிலையத்திற்கு மேல் ரயில் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து பயணிகள் ரயிலை விட்டு இறங்கி டிக்கெட் வழங்கும் இடத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அப்போது, ரயில்வே அதிகாரிகள் கரூர் முதல் திருச்சி வரையுள்ள ரயில் கட்டணத்தை திருப்பி தருவதாக கூறியதை அடுத்து பயணிகள் கலைந்து சென்றனர். வயதான முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி திருச்சி செல்ல பேருந்து நிலையம் சென்றனர். முறையான அறிவிப்பு செய்தும், ஒரு சில ரயில்வே பணியாளர்கள் செய்யும் தவறுகளால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.