பிரதமர் மோடி இன்று, ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Continues below advertisement

உத்தரபிரதேச அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கடந்த 12-ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலும்; திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களாக திகழ்கின்றன. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.

Continues below advertisement

இன்று காலை 8:30 மணிக்கு திருச்சிக்கு தனி விமானத்தில் செல்கிறார் பிரதமர் மோடி. 11:00 மணிக்கு காரில், சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி, தாயார், ரெங்கநாதர் மற்றும் அங்குள்ள சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.

இன்று மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.

21-ம் தேதி காலை மீண்டும் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார். பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோயில், ராமநாதசுவாமி கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்திற்கு இன்று பிரதமர் மோடி வர உள்ளதால், 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் தங்கும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ராமநாதசுவாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் அக்னி தீர்த்தம் கடல், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள், பாம்பன் பாலம் போன்ற கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ள பொது இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் விபரங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது..

அதேபோல, ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.