சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி- முருகேசன் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிட்டத்தட்ட, 19 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த முருகேசன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் இருவரும் ஊரைவிட்டுச் சென்று வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ளனர். சாதிக் கடந்த இத்திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் கண்டுப்பிடித்து கொண்டு வந்து, புதுக்கூரைப்பேட்டை முந்திரிதோப்பில் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தனர்.   


இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டி, ரங்கசாமி, அய்யாசுவாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில் 4-வது குற்றவாளியான அய்யாசுவாமி மற்றும் 9ஆவது குற்றவாளியான குணசேகரன் இவர்களை தவிர்த்து மற்ற 13 நபர்களும் குற்றவாளிகள் என கடலூர் சிறப்பு நீதிமன்றம். 


தண்டனை அறிவிப்பு: கண்ணகி-முருகேசன் தம்பதியினர் ஆணவக் கொலை வழக்கின் தண்டனை விவரங்களை கடலூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 13 பேரில், மருதுபாண்டி என்பவருக்கு தூக்குத் தண்டனையும், மீதமுள்ள 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியான மருதுபாண்டி உயிரிழந்த கண்ணகியின் சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.