பொதுநல வழக்குகள் தொடர்பவர்களுக்கெல்லாம் முன்னோடியான ட்ராஃபிக் ராமசாமி நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். 87 வயதான ராமசாமியின் அடையாளமே சட்டைப்பை நிரம்ப வழியும் புகார் கட்டுகள்தான். சுமார் 500 பொதுநல வழக்குகளுக்கு மேல் தொடர்ந்தவர் ராமசாமி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் வழக்குகள் தொடர்வதற்காகவே சட்டத்தை தானே படித்துத் தெரிந்துகொண்டார்.



  • இவர் தொடுத்த பல பொதுநல வழக்குகள் தமிழ்நாடு அரசைப் பல நேரங்களில் சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்தியிருக்கிறது.ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு முதலமைச்சர்களையும் நீக்கக்கோரி அடுத்தடுத்து வழக்குகள் தொடர முயற்சி செய்தவர். அதற்காக இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அரசால் அலைக்கழிக்கப்பட்ட கதை வரலாறு அறிந்தது.


  • ஒருகாலத்தில் கட்சிகளின் பேனர்களால் நிரம்பி வழிந்த சென்னையின் சாலைகளில் இன்று பேனர்கள் இல்லாத நிலை உருவானது ராமசாமி தொடுத்த வழக்கால்தான். ‘பேனர் வைக்கக்கூடாது, போஸ்டர் ஒட்டக்கூடாது’ எனத் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.  

  • சென்னையின் போக்குவரத்து, சாமானியனின் பொறுப்பு எனத் தானே களமிறங்கி சீர்திருத்தம் செய்தவரை ஊர்க்காவல் படை உறுப்பினராக நியமித்தது காவல்துறை. தமிழ்நாட்டின் ஊர்க்காவல் படையின் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவர் ராமசாமி.

  • மோட்டார் பொருத்தப்பட்டு காப்பீடு இல்லாமல் இயக்கப்படும் மீன்பாடி வண்டிகளால் ஏற்படும் சாலை விபத்துக்களைத் தடுக்க அந்த வண்டிகளுக்குத் தடைகோரினார் ராமசாமி. அவர் வழக்கை ஏற்று சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் மீன்பாடி வண்டிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டது.

  • வீதிமீறிக் கட்டப்படும் சென்னையின் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு எதிராக 2016ல் பொதுநலவழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அப்படியான கட்டடங்களுக்கு மின்சார விநியோகம் மற்றும் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது உயர்நீதிமன்றம். -

  •  ’அம்மா’ என்கிற பெயர் அரசு திட்டங்களில் இருந்து நீக்க வழக்கு தொடர்ந்திருக்கிறார் ராமசாமி. ’அம்மா’ உணவகம் திட்டம் அறிவிக்கப்பட்டபோது அரசு திட்டத்துக்கு அம்மா எனப் பெயர் எதற்கு என வாதிட்டார். பத்துரூபாய் குடிநீர் திட்ட பாட்டில்களில் இரட்டை இலைச் சின்னத்தை நீக்கவும் வழக்கு தொடர்ந்தார்.

  • கிரானைட் முறைகேடு வழக்கில் ராமசாமி பொதுநல வழக்கு தொடுக்காமல் போயிருந்தால் இன்று சகாயம் ஐ.ஏ.எஸ் என்கிற பெயரே உலகுக்குத் தெரியாமல் போயிருக்கும்.


ராமசாமிக்கு அஞ்சலி!