சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் சாலையில் உள்ளது நாட்டரசன் கோட்டை. பிரமாண்ட ஆர்ச் வழியாக செல்லும் நமக்கு செட்டிநாடு வாசத்தை உணர முடியும். வீதிகள் மட்டுமல்ல ஆங்காங்கே  செட்டிநாடு பலகாரம் செய்யும் குடிசைத் தொழிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊரின் மத்தியில் அமைந்துள்ள தெப்பமும், கண்ணாத்தாள் கோயிலும் அழகோ அழகு.  ஊருக்குக் கடைசி உலகம்பட்டி நாட்டுக்கு கடைசி நாட்டரசன் கோட்டை என்பது நாட்டுக்கோட்டை நகரத்தாரின் ஊர்களைப் பற்றிய பழமொழியாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இன்றும் வாழும் 76 ஊர்களில் ஒன்றாக இவ்வூர் விளங்குகிறது, இங்குள்ள நகரத்தார்கள் அருகில் உள்ள முத்தூர் வாணியங்குடி பகுதியில் இருந்து பின்னர் இங்கு குடியேறி இருக்கலாம். இவ்வூரில்  தை  மாதம் முதல் வாரம் வருகின்ற செவ்வாய்க்கிழமை நகரத்தார் கொண்டாடுகிற தைப்பொங்கல் விழா உலகப் புகழ் பெற்றது. இவ்வூருக்கு பனசை, களவழி நாடு, மும்முடி பாண்டியாபுரம் என வேறு பெயர்களும் உண்டென்பார்கள்.



 

கம்பனுக்கு பள்ளிப்படை.

 

புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு, என்பார் பாரதி, கம்பன் தன் இறுதிக் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஊர் இவ்வூராகும் இங்கு அவருக்கு பள்ளிப்படை எழுப்பப் பெற்று வழிபாட்டில் உள்ளது. கம்பன் குளம், கம்பன் வாய்க்கால்,ஆகியன இன்றும் வழக்கில் உள்ளன. அடிக்கரை பற்றிப் போனால் முடிக்கரையை அடையலாம் என மாடு மேய்க்கும் சிறுவன் கவித்துவம் பேச கம்பன் கண்டதும் இங்கேதான். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம்  காரைக்குடி கம்பன் கழகத்தார் கம்பனுக்கு இவ்வூரில் விழா எடுத்து சிறப்பிக்கின்றனர். குழந்தைகள் பேச்சாற்றல் மிக்கவராகவும் கலையில் சிறந்து விளங்கவும் கம்பர் சமாதியில் மண்ணெடுத்து நாக்கில் வைக்கும் வழக்கம் இன்றும் இப்பகுதி மக்களால் பின்பற்றப்படுகிறது.



 

கரிகால் சோழீஸ்வரர் கோவில்.

 

இங்கு பழமையான கரிகால் சோழீஸ்வரர் எனும் சிவன் கோவில் உள்ளது. இதில் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன, கல்வெட்டில் இறைவனின் பெயர் களவழி நாட்டைச் சார்ந்த பாண்டியா புரத்தில் திருச்சீவனமுடைய மாதேவர் எனக் குறிப்பிடப்படுகிறது. இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் குறித்து கல்வெட்டு செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. விக்கிரவாண்டியன் கல்வெட்டு இறைவனின் நாள் வழிபாட்டுச் செலவினங்களுக்காக தனித்துவமான அளவுகோலால் முப்பது மா நிலம் அளந்து அளித்ததைப் பற்றி கூறுகிறது. மேலும் இக்கோவில் கல்வெட்டுகள் ஆளுடைய பிள்ளை எனும் திருஞானசம்பந்தரை எழுந்தருளிவித்தமை பற்றி கூறுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் களவழி நாடு என்பது பின்னாளில் கலை வேள்வி நாடு என குறிப்பிடப்படுகிறது. பின்னாளைய செப்புப் பட்டயங்களில் கலைவேள்வி நாடு என்றே வருகிறது.



 

உடையவர் கோவில்.

 

புரட்சித் துறவி என அழைக்கப்படும் ராமானுஜருக்கு உடையவர் கோவில் எனும் தனிக்கோவில் எழுப்பப் பெற்று வழிபாட்டில் இருந்துள்ளது. இன்றும் வீரகண்டான் ஊரணியின் கிழக்குக்கரையில் உடையவர் மண்டபம் என்ற பெயரில் கருவறை சிதைவுற்ற நிலையில் உள்ளது. கோவில் சுவற்றில் 13ஆம் நூற்றாண்டு துண்டுக் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. பெருமாள் கோவில், இராமர் கோவில், கருப்பர் கோவில், செங்கமலத்தம்மன் கோவில் என கோவில் நிறைந்த பகுதியாக இவ்வூர் உள்ளதோடு தெருக்கள் தோறும் மாரியம்மன் வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

 

கண்ணுடைய நாயகி எனும் கண்ணாத்தாள்

 

நாட்டரசன் கோட்டைக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரண்டை குளம் என்னும் பகுதியில் கண்ணாத்தாள் பிறந்த வீடு எனும் கோவில் உள்ளது, இப்பகுதியில் உள்ள ஊரில் இருந்து நாட்டரசன் கோட்டைக்கு பால் கொண்டு வரும்போது இவ்விடத்தில் கால் இடறி பால் தொடர்ச்சியாக கொட்டிப் போக இச்செய்தியை மன்னரிடம் தெரிவிக்க முற்பட்டபோது மன்னரின் கனவில் தோன்றி பலாமரத்தடியில் தான் இருப்பதாகக் கூறி தோண்டுவித்தனர். அங்கே வெளிப்பட்ட அம்மன் சிலையை  தற்போது ஊருக்குள் இருக்கும் இந்த இடத்திற்கு கொண்டு வந்து வைத்ததாகக் கூறுகின்றனர். கண்ணாத்தாள் கோவில் கொடி கம்பம் முதலிய திருப்பணிகள் சேதுபதிகளால் செய்யப்பட்டுள்ளன. இதை முத்துக்குட்டி புலவர் எழுதிய கண்ணுடைய அம்மை பள்ளு, 'கனக விஜய ரகுநாத சேதுபதி செய்த கொடிக்கம்ப மண்டபம் புகழக் கூவுவாய் குயிலே' என்று பாடுகிறது. மேலும் நாட்டரசன் கோட்டையை பற்றி சேதுபதி விரலி விடு தூது, நயினார் கோயில் வழிநடைச் சிந்து, திருப்புல்லாணி நொண்டி நாடகம் ஆகிய நூல்களும் சிறப்பித்துக் கூறுகின்றன. வைகாசி விசாக நட்சத்திரத்தில் நடைபெறும் கண்ணுடைய நாயகி அம்மன்  திருவிழா தொடங்குவதற்கு முன்னர் சேங்கை வெட்டு எனும் திருக்குளத்தில் தூர் எடுக்கும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இத் திருக்குள நீரானது தனித்துவ சுவையுடன் இன்னும் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது, கோயிலின் மேற்குப் பகுதியில் இதற்கு என்று விடப்பட்டுள்ள 30 ஏக்கர் நிலத்தில் பெய்யும் மழை நீர் குளத்தில் நேரடியாக சேகரிக்கப்படுகிறது. கண்ணாத்தாள் கோவில் திருவிழாக்களில் எட்டாம் நாள் நடைபெறும் வெள்ளி இரத விழா நெடுங்காலமாக மக்களின்  சிறப்புக்குரியதாக விளங்குகிறது.

உற்சவ மூர்த்தியான களியாட்டக் கண்ணாத்தாள் சிவகங்கை தேவஸ்தான பதிவேட்டில் சாமுண்டீஸ்வரி என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

களியாட்டத் திருவிழா.

 

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை களியாட்டம் எனும் விழா கொண்டாடப்படுகிறது பாரம்பரியமான இவ்விழாவில் இரு  வேறு சமூகத்தினர் ஒருவர் மாப்பிள்ளை வீடாகவும் மற்றொருவர் பெண் வீடாகவும் இருந்து புதிதாக மண், செங்கல்,மரநிலை வைத்து வீடு கட்டி ஓவியம் எழுதி ஒவ்வொரு நிலையாக ஒரு மாத காலம் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மதுக் குடம் எடுத்தல், மற்றும் ஆடு பலி கொடுத்தல் போன்றவை நிகழ்கின்றன. இதில் பலி கொடுக்கப்படும் ஆட்டின் ரத்தம் சிந்தாமல் வெள்ளை மாத்தில் பிடிக்கப்படுகிறது. மேலும் இவ்வூரில் நிலத் தொடர்பான சச்சரவுகள் மற்றும் இன்ன பிற வகையான தேவைகளுக்காக வழங்கப்பட்ட செப்பேடுகள் இம்மக்களிடம் பாதுகாக்கப்படுகின்றன" என்று சிவகங்கை தொல்நடை குழுவினர் தெரிவித்தனர்.