மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து போராடிவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். 


முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு கோரி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.


இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் முடிந்திருக்கும் சூழலில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.






இதற்கிடையே நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி. டி. ஆர். பாலு, “ஆளுநரின் கருத்து நீட் விலக்கு மசோதாவுக்கு நேர்மாறாக உள்ளது. நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எண்ணமும்கூட.  மேலும், இந்த மசோதா பாஜக உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது” என்றார்.


ஆனால், சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டபோது பாஜக தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், டி.ஆர். பாலு பேசிய வீடியோவை பகிர்ந்திருக்கிறார். மேலும், “தமிழ்நாடு அரசு மசோதா கொண்டுவந்தவுடன் நாங்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். ஏன் டி.ஆர். பாலு தவறாக வழிநடத்துகிறார்?. மாணவர்களை ஏமாற்றுவது பத்தாதுன்னு பாராளுமன்றத்தையுமா” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண