நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு எழுதிய பாதை மாறா பயணம் நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இரண்டாவது பிரதியை கவிஞர் வைரமுத்துவும் பெற்று கொண்டனர். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின் உடன் எம்.பிக்கள் கனிமொழி மற்றும் ஆ.ராசா மற்றும் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் பேச்சு:
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்காக இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் டி.ஆர்.பாலு. 17 வயதில் தீவிர அரசியலில் நுழைந்த பாலு ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே தலைமை என கொள்கைப் பிடிப்போடு இப்போதும் இருக்கிறார். அண்ணா கலைக்கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். எனக்கு பேச்சு பயிற்சிக் களமாக அமைந்தது டி.ஆர்.பாலுவின் அண்ணா கலைக்கழகம்தான்.
மிசா காலம் மிசா காலத்தில் டி.ஆர்.பாலுவுக்கும் எனக்கும் இடையேயான நட்பு இன்னும் நெருக்கமானது. 27 ஆண்டுகள் எம்பி ஆகவும், 3 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார் பாலு. இவையெல்லாம் டி.ஆர்.பாலுவின் உழைப்பிற்கு கிடைத்த ஊதியம். சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த கருணாநிதி தீவிரம் காட்டினார். சேது சமுத்திர திட்டத்திற்கு நிதி ஒதுக்க உதவியாக இருந்தவர் டி.ஆர். பாலு. ஆனால் இந்த திட்டத்தை பாஜக தடுத்து விட்டது. சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர். பாலு கையில் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
துரைமுருகன்பேச்சு:
முன்னதாக பேசிய அமைச்சர் துரைமுருகன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடனான தனது நட்பு தொடர்பான நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அவரது கலகலப்பான பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
தேம்பி தேம்பி அழுத டி.ஆர். பாலு
தொடர்ந்து பேசிய துரைமுருகன், “ஒருசமயம் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பேசும்போது கலைஞருக்கும், பாலுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கருணாநிதி சொன்னது தவறு என்றும் தான் சொல்வது சரி எனவும் பேசினார். இதனால் ஒருகட்டத்தில் கோபமடைந்த கலைஞர், நீ தலைவனா, நான் தலைவனா, நான் சொல்வது தான் சரி என கூறினார். தொடர்ந்து பாலு பேச, ஏய் போடா என கலைஞர் கூறியதும் பாலு அங்கிருந்து கோபமாக சென்று விட்டார். இதனிடையே, குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக சிறிது நேரம் யோசித்த கலைஞர், "பாலு சொன்னதுதான்ப்பா கரெக்ட். நான்தான்ப்பா அவசரப்பட்டு சொல்லிட்டேன்" என்றார். அதோடு, பாலுவை அழைத்து "என்னை மன்னிச்சிடு பாலு" என கூறினார். தான் சொன்ன கருத்துக்கு தொண்டனிடம் மன்னிப்பு கேட்ட மகத்தான தலைவர் கருணாநிதி” என துரைமுருகன் நெகிழ்ச்சியுடன் பேசினார். இதை மேடையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த டி.ஆர். பாலு, தன்னிலை மறந்து கண்கலங்கி தேம்பி தேம்பி அழுதார். இதனால் மேடையே நெகிழ்ச்சியாக மாறியது.