25,000 ஏக்கர் விளை நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்காக இரண்டு நாள் நடைபயணத்தை பாமக மேற்கொண்டுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், வாணதிராயபுரம் கிராமத்தில் மக்களிடையே பேசியதாவது,


"49 கிராமங்களில் இருந்து, 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என 2 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். இது 49 கிராமங்களுக்கு மட்டுமான சாதாரண பிரச்சனை கிடையாது, மாவட்டத்தின் பிரச்சனை. என்.எல்.சி. நிர்வாகம் 66 ஆண்டு காலத்திற்கு முன்பு 37 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பிடுங்கிக் கொண்டது. அன்று நிலம் கொடுத்தவர்களில் ஒருவர் கூட இன்று வேலையில் இல்லை. நிலம் கொடுத்தவர்களில் 1800 பேருக்கு வேலை கொடுத்தார்கள், அவர்கள் இன்று பணியிலும் இல்லை. பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள். அன்றில் இருந்து இன்று வரை என்.எல்.சி. நிர்வாகம் நம்மை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. 


தற்போது என் கிராமம் வரவில்லை என இன்று நீங்கள் அமைதியாக இருந்தால், பிற்காலத்தில் உங்களின் நிலமும் பாதிக்கப்படும். உங்களின் பிள்ளைகள் பாதிப்பை சந்திப்பார்கள். ஏனென்றால் என்.எல்.சி. நிறுவனம் அப்படியான நிறுவனம். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அடியில் நீர் கிடைத்தது. உலகளவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு பின்னர் நெய்வேலியில் மட்டுமே தன்னூற்று இருந்தது. ஆனால், இன்று அந்தநிலை போய்விட்டது. அன்று வீட்டில் கடைக்கால் எடுத்தால் நீர் நிரம்பி நிற்கும். அன்று 10 அடியில் இருந்த நிலத்தடி நீர் இன்று 1000 அடிக்கு போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம் என்.எல்.சி. நிறுவனம், நிலத்தடி நீரை இராட்சத குழாய்கள் மூலமாக உறிஞ்சி கடலுக்கு அனுப்பி வைக்கிறது.  நீரை வெளியேற்றிய பின்னர் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து, அதனை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள்.


அவர்களின் மின்தேவைக்கு நெல், கரும்பு, வாழை என முப்போகம் விளைந்த மண்ணை அபகரிக்க நினைக்கிறார்கள். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 இலட்சம் விவசாயிகளுக்கு வருமானத்தைக் கொடுக்கும் மண்ணை பிடுங்க என்.எல்.சி. முயற்சிக்கிறது.


இதற்கு உடந்தையாக இருப்பது யார் தெரியுமா? நீங்கள் நம்பி வாக்களித்து அனுப்பி வைத்த 2 அமைச்சர்களும், இம்மாவட்டத்தின் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் தான். மண்ணையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் காப்பதே அமைச்சரின் வேலை. உங்களின் நிலத்தை பிடுங்கி என்எல்சிக்கு வழங்குவேன் என இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு அமைச்சர் வேளாண்துறை அமைச்சர். அவரின் வேலை என்ன?.. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் வேலை தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளை பாதுகாப்பது, விவசாய மண்ணை பாதுகாப்பதே ஆகும்.


தனியார்வசம்:


என்எல்சி நிறுவனம் 2 ஆண்டுக்குள் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொது நிறுவனத்தை விற்பனை செய்து பணமாக்கும் நடவடிக்கையின் கீழ் என்எல்சி நிர்வாகம் 2025 க்குள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இப்படி 2 ஆண்டுக்குள் என்எல்சி நிர்வாகத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துவிட்டால், உங்களுக்கு எதற்கு 25 ஆயிரம் ஏக்கர் நிலம் வேண்டும்?


தற்போது நிலக்கரியா இல்லை? 1989 ல் எடுத்த 10000 ஏக்கர் நிலம் அப்படியே உள்ளது. அந்த 10000 ஏக்கர் நிலத்தில் வெட்டி எடுத்தாலே 40 ஆண்டுகளுக்கு நிலக்கரி போதுமானது. அதனை விட்டுவிட்டு இன்னும் 25000 ஏக்கர் பிடுங்க நினைப்பது ஏன்?. எதற்கு? தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்திடவேண்டும் என்ற துடிதுடிப்புதான். அது எந்த நிறுவனம் தெரியுமா? இந்தியாவிலேயே மிகப்பெரிய A என ஆரம்பிக்கும் நிறுவனம்.


A என்ற கம்பெனிக்கு விற்பனை செய்ய உள்ளார்கள். அமைச்சர்களுக்கும், என்எல்சி நிர்வாகிகளுக்கும் விற்பனை தொடர்பான தகவல் தெரியும். தனியாரிடம் என்.எல்.சி. விற்பனை செய்யப்பட்டுவிட்டால் நிலத்தை எடுக்க முடியாது. அதற்கு முன்பாகவே நிலத்தை எடுத்துவிட்டு என்.எல்.சி.யை விற்பனை செய்துவிட்டோம் என கூறவதற்கு, அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், எல்எல்சி நிர்வாகிகளும் A நிறுவனத்திற்கும், NLC நிர்வாகத்திற்கும் தரகர்கள் போல் செயல்படுகிறார்கள்.


இழப்பீடு பொய்:


நிலத்திற்கு இழப்பீடாக ரூ.25 இலட்சம், ரூ.50 இலட்சம், ரூ.1 கோடி என பொய் சொல்கிறார்கள். கடந்த வாரம் நாங்கள் நிரந்தர வேலை கொடுக்க முடியாது என ஆட்சியர் கூறுகிறார். நான் வருகிறேன் என்ற அறிவிப்பு நேற்று வந்ததும், 500 பேருக்கு 5 ஆண்டுகள் கழித்து நிரந்தர வேலை கொடுப்பதாக கூறுகிறார்கள். 5 ஆண்டுகளுக்கு பின்னர் நிறுவனம் உங்களிடம் இருக்கப்போவது இல்லை. அதனை A நிறுவனம் வாங்கியிருக்கும். அன்று உங்களுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தம் இருக்காது. நீங்கள் எப்படி வேலை கொடுப்பீர்கள். A நிறுவனத்திற்கு தரகர் போல இருக்கிறார்கள். யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?


தமிழகத்தின் மொத்த மின்தேவை நாளொன்று 18 ஆயிரம் மெகாவாட். என்எல்சி நிர்வாகம் 2 ஆயிரம் மெகாவாட் தயாரிக்கிறது. அதில் தமிழகத்திற்கான பங்கு என்பது 40% மட்டுமே. மீதி மத்திய அரசுக்கு சென்றுவிடுகிறது. தமிழ்நாட்டிற்கு 800 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பிறவழிகளில் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது. என்.எல்.சி. இல்லையென்றால் தமிழகம் இருண்டுவிடும் என பல பொய்கள் கூறி ஏமாற்றி வருகிறார்கள்.


இதைப்போல இனி யாரையும் ஏமாற்ற முடியாது. இராணுவம் உட்பட எதையும் அழைத்து வாருங்கள். உங்களால் ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது. இது 49 கிராம பிரச்சனை இல்லை. என்.எல்.சி. தண்ணீர் எடுத்தால் 30 கி.மீ தொலைவில் உள்ள ஊரிலும் தண்ணீர் இருக்காது. குடிக்க நீர் இருக்காது என்றால், விவசாயம் என்ன நிலை என்று பாருங்கள். எம்.ஆர்.கே ஊரான முட்டத்திலும் அதே நிலை வரும். எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தின் வீடு குறிஞ்சிப்பாடியில் உள்ளது. அங்கும் நீர் இருக்காது. 10 அடி இருந்த நிலத்தடி நீர் 1000 அடிக்கு சென்றுவிட்டது. 




உடந்தை ஏன்?


தி.மு.க. அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசை, கொள்கைகளை எதிர்த்தே செயல்படுகிறது. இதற்கு மட்டும் தி.மு.க. உடந்தையாக இருப்பது ஏன்? A கம்பெனி 2 ஆண்டுக்குள் என்.எல்.சி.யை வாங்கிவிடும். அவர்கள் வந்தார்கள் என்றால் வேலைவாய்ப்பும் போய்விடும். இட ஒதுக்கீடும் சென்றுவிடும்.


இதே தமிழக அரசு கோவை அன்னூரில் தொழிற்பூங்கா தொடங்க 3500 ஏக்கர் கையகப்படுத்துவதாக அறிவித்தது. அதில் 2000 ஏக்கர் நிலம் அரசு நிலம். 1500 ஏக்கர் தனியாருக்கு சொந்தமானது. 1500 ஏக்கரில் விவசாயம் நடந்து வந்ததாக கூறப்பட்டது.


1500 ஏக்கர் விவசாய நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமி சென்று போராடுகிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட பல கட்சியினர் போராடுகிறார்கள். நெல், வாழை, பலா, கருப்பு என முப்போகம் விளையும் 25000 ஏக்கர் நிலத்தை எடுக்கக்கூடாது என யாராவது வந்து போராடினார்களா? குரல் கொடுத்தார்களா?


”விழிப்புணர்வு பெறுங்கள்"


மக்களிடம் சென்று பல கோடிக்கணக்கில் கொடுக்குறேன் என பேசி பொய்யுரைப்பார்கள். அவை வேண்டாம். நிலத்தை விட்டுவிடுங்கள், என் மண்ணையும், மக்களையும் விட்டுவிடுங்கள். என்.எல்.சி. நிறுவனமே வெளியேறு. எங்களுக்கு தேவையில்லை. இறுதி வரை நாங்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறோம். எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும். இதனை முன்னிலைப்படுத்தியே 2 நாட்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன். அதற்கு ஆதரவு தாருங்கள். பா.ம.க தலைமையில் விழிப்புணர்வு நடந்தாலும் கட்சி, ஜாதி, மதத்தை மறந்து உங்களின் எதிர்காலத்திற்காக வாருங்கள். உங்களை ஏமாற்றுகிறார்கள். நீங்கள் ஏமார்ந்துவிடாதீர்கள். பெண்கள் அதிகளவு விழிப்புணர்வு பெறுங்கள்" என அன்புமணி பேசினார்.