சுங்கச்சாவடிகளை சீரமைப்பதற்கு முன்பாக சுங்கக்கட்டணங்களை உயர்த்தக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, அவற்றுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்ட போது, தரமான சாலையில் பயணம் செய்வதை நினைத்து மக்கள் மிக மகிழ்ச்சியாக சுங்கக் கட்டணம் செலுத்தினார்கள்

Continues below advertisement

சுங்கச்சாவடிகளை சீரமைப்பதற்கு முன்பாக சுங்கக்கட்டணங்களை உயர்த்தக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Continues below advertisement

இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டில் வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சொந்தமான 24 சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு (ஏப்ரல் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.  மக்களின் துயரங்களை உணராமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 48 சுங்கச்சாவடிகளில் இரு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வை சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. மீதமுள்ள 46 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. அவை தவிர்த்த 24 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி அதிகாலை முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப் படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. சுங்கக்கட்டண உயர்வு குறைந்தபட்சம் 10 ரூபாயாகவும், அதிகபட்சம் 85 ரூபாயாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இப்போது எதிர்கொண்டு வரும் சூழலில் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது எவ்வகையிலும் சரியாக இருக்காது. உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து விட்டதாகக் கூறி, பெட்ரோல், டீசல் விலை கடந்த 9 நாட்களாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.  9 நாட்களில் 8 தவணைகளில் பெட்ரோல், டீசல் விலைகள் ரூ.5க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஒவ்வொரு தனி நபரும் மாதம் தோறும் சுமார் ரூ. 500 கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இத்தகைய சூழலில் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது தான் உண்மை.

தனிநபர்களின் நிலை இதுவென்றால், எரிபொருள் விலை உயர்வு காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கோடிக்கணக்கில் கூடுதல் செலவு ஏற்படும். அத்துடன் சுங்கக்கட்டண உயர்வும் சேர்ந்து கொண்டால், அதை சமாளிக்க முடியாது. இதையே காரணம் காட்டி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், அடித்தட்டு மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும். மக்கள் அனுபவித்து வரும் இந்த சிரமங்களை புரிந்து கொள்ளாமல் கட்டண உயர்வு குறித்து எந்திரத் தனமாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவெடுப்பது தவறாகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் இதுவரை ஈட்டிய லாபம் குறித்து தணிக்கை மேற்கொண்டு, முதலீட்டை திரும்ப எடுத்த சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதை செய்யாமல் சுங்கக்கட்டணத்தை மட்டும் தொடர்ச்சியாக உயர்த்தி வருவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இது பெரும் அநீதியாகும்.

நாடாளுமன்றத்தில் கடந்த 22-ஆம் தேதி உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி,‘‘நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படும். கூடுதல் சுங்கச்சாவடிகள் அகற்றப் படும். இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களில் செய்யப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார். அடுத்த 3 மாதங்களுக்குள் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாக 24 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, அவற்றுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்ட போது, தரமான சாலையில் பயணம் செய்வதை நினைத்து மக்கள் மிக மகிழ்ச்சியாக சுங்கக் கட்டணம் செலுத்தினார்கள். ஆனால், காலப்போக்கில் சுங்கக்கட்டண நிர்ணயம் மற்றும் வசூலில் வெளிப்படைத் தன்மை இல்லாமல், தாங்கள் சுரண்டப்படுவதை மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

எனவே, நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ள சுங்கக்கட்டண உயர்வை கைவிட வேண்டும். 60 கி.மீக்கு ஒன்று என்ற வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படுவதைப் போன்று, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் எவ்வளவு வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது என்பதை தணிக்கை செய்து சுங்கக் கட்டணங்களையும் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement