தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.


கட்டண உயர்வு:


இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில், முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்,.  அந்த வகையில், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, உளுந்தூர்பேட்டை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் கட்டணம் உயர்ந்துள்ளது.


புதிய கட்டணம் எவ்வளவு?


மொத்தமாக ரூ.5 முதல் ரூ.65 வரையில் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது. அதாவது, கார்களுக்கு 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்கு 165 ரூபாயிலிருந்து 175 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக சக்கரங்களை கொண்ட லாரிகளுக்கு 20 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


எதிர்ப்பு ஏன்?


உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நேரத்தில்  சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதன் மூலம் அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும்,  இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என அரசியல் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல், சுங்கக்கட்டணத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்துவது நியாயமில்லை என வாகன ஓட்டிகள் சாடி வருகின்றனர்.


சுங்கச்சாவடிகள்:


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் (NHAI) உள்ள 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. முதன்மையான சுங்கச்சாவடிகள் என்ற அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


அதிர்ச்சி தகவல்:


முன்னதாக, சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதோடு, கடந்த ஆகஸ்ட் 2019 முதல் ஜூன் 2020 வரை தாம்பரம்- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்ற வாகனங்களில் பாதியளவு வாகனங்கள் கட்டணம் செலுத்தவில்லை என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவை பெரும்பாலும் 'விஐபி வாகனங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுக்குள் சுங்கச்சாவடி வழியாக சென்ற 1.17 கோடி வாகனங்களில் (53.27%) 62.37 லட்சம் விஐபி வாகனங்கள் என்றும், அந்த வாகனங்களுக்கு விதிகளின்படி கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் NHAI ஆல் நியமிக்கப்பட்ட சுங்கச்சாவடி இயக்க நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல், அதே சாலையில் அமைந்துள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியை பயன்படுத்திய 36% வாகனங்கள் விஐபி வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆத்தூர் சுங்கச்சாவடியில் 88.92 லட்சம் வாகனங்களில் 32.39 லட்சம் வாகனங்கள் பயனர் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.