CM Stalin: சர்வதேச புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம் என் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.


சர்வதேச புலிகள் தினம்:


உலகம் முழுவதும் புலிகளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புலிகளை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக ஜூன் 29-ம் தேதி சர்வதேச உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2010-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் மாநாட்டில் இந்த முடிவானது எடுக்கப்பட்டு வருடாவருடம் அனுசரிக்கப்படுகிறது. உலக புலிகளின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75% புலிகள் இந்தியாவில் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் 2000-ஆம் ஆண்டில்தான் புலிகளின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தது. இதனை தொடர்ந்து, தற்போது புலிகளின் எண்ணிக்கை நன்றாகவே உயர்ந்துள்ளது என்கிறது தரவுகள். 


தமிழ்நாட்டில் எத்தனை?






இந்தியாவில் மொத்தம் 51 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 சாரணாலயங்கள் இருக்கிறது. சமீபத்திய தகவலின்படி, தமிழ்நாட்டில் மட்டும் 306 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் 264 ஆக இருந்த நிலையில், தற்போது 306 உயர்ந்துள்ளது.  இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசின் முயற்சியால் 2018ஆம்  ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 306 ஆக உயர்ந்துள்ளது.  எனவே, சர்வதேச புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்" என தெரிவித்திருக்கிறார்.


மத்திய பிரதேசம் முதலிடம்: 


உலக புலிகள் எண்ணிக்கையில் 75 சதவிகிதம் இந்தியாவில்தான் இருக்கின்றன. இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளதாக இந்திய வன உயிரின ஆய்வு மையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 785 புலிகள் உள்ளன. இதனை அடுத்து, கர்நாடகாவில் 563, உத்தர காண்டில் 560, மகாராஷ்டிராவில் 444, கார்பெட்டில் 260, பந்திப்பூர் 150, நாகர்ஹோல் 141, பாந்தவ்கர் 135, துத்வா 135 புலிகள் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.  2018ஆம் ஆண்டு மத்திய பிரசேதத்தில் புலிகளின் எண்ணிக்கை 526 ஆக இருந்த நிலையில், தற்போது 785ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேபோன்று, நாட்டில் மொத்தமுள்ள 51 புலிகள் காப்பகங்களில், தமிழ்நாட்டின் முதுமலை, ஆனைமலை உட்பட 12 காப்பகங்கள் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.