தமிழ்நாடு:


ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் மாவட்ட கவுன்சிலருக்கான அதிக இடங்களில் திமுக முன்னிலை வகுக்கிறது. ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களிலும் திமுக முன்னிலை வகுக்கிறது.


கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த  கார்த்திக் ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார்.


வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயில்களை திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது


நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கனமழை பெய்யக் கூடும்‌. சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு கிராமத்தில் ரூ 1,200 கோடி முதலீட்டில் 'பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா' தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.


நீலகிரி மாவட்டம் மசினகுடியில்17 நாட்களாகத் தேடப்பட்டு வந்த டி.23 புலியின் நடமாட்டம் ஒம்பெட்டா வனப்பகுதியில் கண்டறியப்பட்டது.


தமிழகத்தில் 10, 11 , 12 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நவம்பர் 1 ஆம்  தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணை திறப்பினையடுத்து பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்தியா:


நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக மத்திய மின்சாரத்துறை மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். நிலக்கரி விநியோகம் அதிகரித்து வருகிறது, தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என்று நாடுமுழுவதுக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம் என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூறினார்.


2 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது


தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28-வது நிறுவன தின நிகழ்ச்சி இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். மனித உரிமை பிரச்சினையை சிலர் தேர்ந்தெடுத்து அணுகுவதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.


உலகம்


அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் பள்ளி கட்டிட பகுதியில் சிறிய ரக விமானம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.


அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸை ஒரு புதிய வணிகத்திற்கு முன்னுதாரணமாகவும் முன்னோடியாகவும் கருதுவது முட்டாள்தனமானது என தெரிவிக்கப்பட்ட கட்டுரையை எலான் மஸ்க் தற்போது பகிர்ந்துள்ளார். பணக்காரர் பட்டியலில் முந்திய நிலையில் தற்போது மீண்டும் அவரை வம்புக்கு இழுத்துள்ளார்.


பொழுதுபோக்கு


பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் (82), சென்னையில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடித்த முதல் படமான வெண்ணிறாடை படத்தில் ஹீரோவாக நடித்தவர் இவர் என்பது குறிப்பிடதக்கது.


விளையாட்டு


ஐபில் இறுதிப்போட்டியில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் விளையாடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் நாளை மோதுகின்றன.