சித்திரைத் திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
சித்திரை பெருவிழாவின் முற்பகுதியில் நடைபெறும் மீனாட்சி கோயில் விழாக்களின் உச்ச விழாவும், இறுதி விழாவுமான தேரோட்டம் இன்று காலை 6:30 மணிக்கு துவங்கி கோலகலமாக நடைபெற்று வருகிறது.
பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 22 நாட்கள் நடைபெறும் 'திருவிழாக்களின் திருவிழா' - சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 23 முதல் மே 4 வரை மீனாட்சி அம்மன் கோயில் விழாக்களும், மே 1 முதல் 10 வரை கள்ளழகர் கோயில் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இதில், மீனாட்சி அம்மன் கோயில் விழாக்கள் ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக நம்பிக்கை உண்டு. அதனடிப்படையில், மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டும் பட்டாபிஷேக விழா ஏப்ரல் 30ம் தேதி இரவு நடைபெற்றது.
பின்னர் மே 1ம் தேதி அன்று திக் விஜயமும், நேற்று மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, இன்று காலை 5 மணி முதல் 5:45 மணிக்குள் மேஷ லக்னத்தில் அம்மனும் சுவாமியும் தேருக்கு எழுந்தருளினர். பூஜைகள் முடித்து 6:30 மணி அளவில் தேர் புறப்பட்டது.
பெரிய தேரில் சுந்தரேசுவரர் - பிரியாவிடையும், சிறிய தேரில் மீனாட்சியும் வலம் வருவர். கோயிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று பெரும் உற்சாகத்துடன், ஆடிப்பாடி தேரை வடம் பிடித்து இழுத்து செல்வர்.
கீழ மாசி வீதியில் துவங்கி தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கீழ மாசி வீதிக்கு தேர் மதியம் வந்து சேரும். 400 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில், மீனாட்சி அம்மனுக்கு அவர் செய்து கொடுத்த பிரம்மாண்ட தேர்களில் தேரோட்டம் நடைபெறுகிறது.
எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த மீனாட்சி கோயில் - அழகர்கோயில் விழாக்களை மன்னர் திருமலை நாயக்கர் அவரது ஆட்சிக்காலத்தில் தான் இணைத்துள்ளார். பாண்டிய நாட்டில் அப்போது நிலவிய சைவ - வைணவ மோதலை தீர்க்கவும், மீனாட்சி கோவிலுக்கு அவர் செய்து கொடுத்த பெரிய தேர்களை இழுக்க ஆட்களை வரவழைக்கவும், பெரிய சந்தைகளை நடத்தி பொருளாதார சுழற்சியை ஊக்குவிக்கவும் இரு கோவில் விழாக்களையும் இணைத்துள்ளார் என கூறப்படுகிறது.
சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்று வரும் நிலையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.