மார்கழி மாத பிறப்பு முன்னிட்டு, காஞ்சிபுரம் அடுத்த ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை முருகன் தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.
வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி திருக்கோயில் - Vallakkottai Murugan Temple
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில், புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இங்கு கருவறையில் ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் முருகப்பெருமான் தங்கமுலாம் கவசமும் சிறப்பு மலர் அலங்காரத்திலும் காட்சியளித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோயில் அருணகிரிநாதரால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.
கோயிலின் சிறப்பு என்ன ?
இங்கு கிருத்திகை, விசாகம், சஷ்டி நாட்களிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் 7 வாரங்கள் வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், பதவி உயர்வு, சொந்த வீடுமனை கிடைப்பதால் வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகன் என்ற சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
புராண காலத்தில் இஷ்வாகு குலத்து அரசன் பகீரதன், தேவர்களின் தலைவன் இந்திரன், துர்வாச முனிவர், பிருகஸ்பதி, பல்லி சாப விமோசனம் பெற்ற சிருங்கி முனிவரின் சீடர்கள் வந்து வணங்கி அருள்பெற்ற தலமாய் விளங்குகின்றது.
பிரபல சினிமா நடிகர்களும் அரசியல் பிரமுகர்களும் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டு பிரபலமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு செவ்வாய், கிருத்திகை, சஷ்டி நாட்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சத்ரு சம்கார பரிகாரத் தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகின்றது.
தங்கமுலாம் கவசம்
தமிழ் மாதங்களில் சிறந்ததாய் போற்றப்படும் மார்கழி செவ்வாயன்று பிறந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி முதல் நாள் மூலவருக்கு தங்கமுலாம் கவசம் அணிவிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் செவ்வாயன்று மார்கழி பிறப்பை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது.
பிறகு மூலவருக்கு பலவித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தங்கமுலாம் கவசம் சாற்றப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு மயில் மண்டபத்தில் மார்கழி மாத சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் வந்து வல்லக்கோட்டை முருகனை வழிபட்டனர்.
ரத்தினாங்கி சேவை
சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சாமந்தி மாலை, வெற்றிலை மாலை அணிந்து ரத்தினாங்கி சேவையில் காட்சியளித்தார். திருமண வரம் வேண்டி வந்திருந்த பக்தர்கள் முருகனுக்கு மாலைகள் சாற்றி வணங்கினர்.
மார்கழி பிறப்பை முன்னிட்டு கருவறை முன்புள்ள மகாமண்டபம் முழுதும் பலவித மலர்களால் வளைவு அலங்காரமும் ஒவ்வொரு சந்நிதி முகப்பிலும் அழகிய மலர் தோரணங்களும் செய்யப்பட்டிருந்தன.
பொது தரிசனத்தில் சென்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்தும் ரூ.100 விரைவு தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சில நிமிடங்களிலும் சுவாமி தரிசனம் செய்தனர். செவ்வாயன்று வந்திருந்த பக்தர்களுக்கு நிர்வாகத்தின் மூலம் நீர்மோர், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா. செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் செய்திருந்தனர்.