மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதால், ஒவ்வொரு பள்ளிகளிலும் வாசிப்போர் மன்றம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, பள்ளிக் கல்வி துறை இயக்குநருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.


இது தொடர்பான கடிதத்தில், “ மாணவர்கள் மின்னணு உபகரணங்களை அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால், பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாகத் தெரிவதில்லை.


வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும்பொருட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஒன்றை ஏற்படுத்தலாம். அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம்.


இவ்வாறு செய்வதன் மூலம் வாசிப்பது மட்டுமில்லாமல், தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு சாத்தியக்கூறுகள் ஏற்படும். சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்கிற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதோடு. இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களைக் கொடுத்து ஊக்குவிக்கலாம். இது, அவர்களிடம் சமூகம் தொடர்பான சிந்தனைகளையும், ஆக்கபூர்வமான விழுமியங்களையும் ஏற்படுத்தும் என்பதால் இதை விரிவாகச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்”  என குறிப்பிட்டுள்ளார்.  


தமிழ்நாடு தலைமை செயலாளராக இருந்த இறையன்பு, 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து அவர் இன்று பணி ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இறையன்பு தனது பணி காலத்தில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தவர். இன்று முதல் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பணியமர்த்தப்படுகிறார். நேற்று கடைசி நாள் என்பதால், இறையன்பு பள்ளி கல்வித் துறை இயக்குநருக்கு மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்போர் மன்றம் அமைக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.


சிவ்தாஸ் மீனா:


 இவர் ஜெய்ப்பூரில் சிவில் எஞ்ஜினீயரிங் படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிவ்தாஸ் மீனா 30 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களின் ஒரு செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவர் மத்திய துறைக்கு மாற்றப்பட்டார். மத்தியில் சுற்று சூழல் மற்றும் வனத்துறைக்கு கீழ், மாசு கட்டுப்பாடு மத்திய பிரிவின் தலைவராக இவர் பணியாற்றி வந்தார். 


அதன் பின் 2021 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டார். திமுக ஆட்சியில் அவர் நகராட்சி நிர்வாக துறை செயலாலராக பதவி வகித்து வந்தார். கடுமையான சூழ்நிலைகளிலும் இவர் திறம்பட செயல்படக்கூடியவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் நாளையுடன் தற்போதைய தலைமை செயலாளர் இறையன்பின் பதவி நிறைவு பெறுவதால், தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.