கரூரில் தற்காலிக மின் இணைப்பை வீட்டு பயன்பாட்டுக்கு மாற்றம் செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கரூர் மாவட்டம், ஈசநத்தம் கோல்டன் நகரில் வசிப்பவர் கார்த்திகேயன். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பை பெற்று கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளார். பணிகள் முடிந்த பிறகு குடியிருப்பு மின் இணைப்பாக மாற்றம் செய்ய ஈசநத்தத்தை அடுத்த பள்ளபட்டியில் செயல்படும் மின்சார வாரிய அலுவலகத்தை கடந்த 2010ம் ஆண்டு அணுகியுள்ளார். அப்போது பணியில் இருந்த உதவி பொறியாளர் சுரேஷ்குமார், 1000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க மனமில்லாத கார்த்திகேயன் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் மின்வாரிய உதவி பொறியாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நடந்த இறுதி விசாரணையில் முன்னாள் உதவி பொறியாளர் சுரேஷ்குமாருக்கு 2 பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பளித்துள்ளார்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial