தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர்  மருந்து வழங்கும் முறையை செயல்படுத்துவது குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு. இதுதொடர்பாக அவர் இன்று தலைமைச் செயலகத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாகப் போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்கமுடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது.மருந்துகளின் கள்ளச்சந்தை விற்பனைப் புகார்களும் வந்தபடி உள்ளன. 


இந்தக் காரணங்களைக் கருத்தில்கொண்டு பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்து இனி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், நோயாளிகளின் குடும்பத்தினரிடம் இந்த மருந்தை வாங்குவதற்கான சீட்டை அளித்து, அவர்களை வாங்கிவைக்கும் செயல்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தவிர்க்கவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதன்படி, வருகிற 18-5-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.


இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.


இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச்சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.


நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொள்ளும்,


இவ்வாறு முதலமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் கலந்துகொண்டனர்.