அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக ஊதிய உயர்வு இருந்து வருகிறது. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை, குரோம்பேட்டையில் உள்ள இன்று 2வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7வது கட்டமாக நடைபெற்ற இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.




போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில்  போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க இரு தரப்பினர் இடையேயும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலமாக ஓட்டுநர்களுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 12 முதல் ரூபாய் 7 ஆயிரத்து 981 வரை ஊதியம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.






அதேபோல, நடத்துனர்களுக்கு ரூபாய் ஆயிரத்து 965 முதல் ரூபாய் 6 ஆயிரத்து 640 வரை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும், 1.2.2001ம் ஆண்டு முதல் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வந்த இடைக்கால நிவாரணம், தற்போதுள்ள ஒப்பந்தப்படி ரூபாய் 1.1.2022 முதல் 31.7.2022 வரையிலான நிலுவைத்தொகையில் நேர் செய்யப்படும். இன்று செய்யப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, தனி பேட்டா, ரிஸ்க் மற்றும் ஷிப்ட் அலவன்ஸ், இரவு பயணப்படி, இரவு தங்கல்படி உயர்த்தி வழங்கப்படும் என்று கையெழுத்தாகியுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஒரே வழிகாட்டுதலுக்கான நிலையாணை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு பணிக்கு ரூபாய் 300 வழங்கப்படும் என்றும் கையெழுத்தாகியுள்ளது.






மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் என்று பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசின் இந்த நிபந்தனைக்கு சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.