சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, மின் கட்டணத்தை குறைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 


மின் கட்டணம் குறைப்பு:


மின் கட்டணம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின்கட்டண ஆணை எண்.7/22, நாள் 09.09.2022-ன் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.




10 சதவிகிதம் குறைப்பு


குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension III-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.


இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய கட்டணம்:


தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்தது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல்  300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


கண்டனம்


இந்நிலையில் மின்கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் என்ற டாக்ட் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக அச்சங்கம் தெரிவித்ததில், கட்டண உயர்வை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்திருப்பது என்பது மிகுந்த வேதனை தருகிறது.



முதலமைச்சருக்கு கோரிக்கை:


இந்தக் கட்டண உயர்வை தமிழக மின்சார வாரியம் திரும்ப பெறவிட்டால், தமிழகத்தின் தொழில் துறையினர் தொழில் நடத்த முடியாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு பிற மாநிலங்களோடு தொழில் போட்டியிட முடியாமல் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும். தமிழக முதலமைச்சர் இந்த கட்டண உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அச்சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, மின் கட்டணத்தை குறைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 



Also Read: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!