தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

அதன்படி, ஆதார் கார்டுடன் மின்சார இணைப்பு எண்ணை இணைப்பதை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.

மானியம் பெறுவதற்கு ஆதார் அட்டையை மின் எண்ணுடன் இணைப்பது அவசியம்:

Continues below advertisement

மின்மானியத்தைப் பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் அட்டையை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ளது. 

இதற்கான, பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அதற்கான அவகாசத்தை மீண்டும் நீட்டித்துள்ளது தமிழ்நாடு அரசு. அதன்படி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

அவகாசம் நீட்டிப்பு:

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு திமுக அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரத்திற்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு, அவகாசம் வழங்கப்பட மாட்டாது. இதுவரை 2.60 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்" என்றார்.

டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டிருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர், "திமுக அரசு அமைந்த பிறகுதான், டாஸ்மாக் கடைகள் அதிகமானது போன்று விரும்பதகாத செய்திகளை சில ஊடகங்கள், தொலைக்காட்சிகள், காலை நாளேடுகள் வெளியிடுகின்றன. இது ஏற்கத்தக்கது அல்ல. கோயில், பள்ளி, கல்லூரி அருகே உள்ள மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு 88 டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டுள்ளன" என்றார்.

டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அப்படிப்பட்ட வாக்குறுதி திமுக அளிக்கவே இல்லை என பதில் அளித்தார்.