விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதியான விராட்டிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள ஏரிக்கரையில் உணவு டெலிவரி பணி செய்யும் இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நகரபகுதியான விராட்டிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள ஏரிக்கரை கரையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் டி எஸ் பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரனையில் திருநெல்வேலியை சார்ந்த பெஞ்சமின் என்ற இளைஞர் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் சென்னையிலிருந்து இருசக்கர வாகனம் மூலம் விழுப்புரம் வழியாக சென்றபோது விராட்டிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்திலுள்ள ஏரிக்கரையில் மது அருந்தி உள்ளதும், உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்து பெஞ்சமின் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பெஞ்சமின் உடன் இருசக்கர வாகனத்தில் வந்து மது அருந்திய நபர் யாரென்றும், எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தில் விராட்டிக்குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.