தமிழ்நாட்டில் நாளை (06.08.2024) ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் இரண்டு நாட்களாக பெருமழை பெய்து வருகிறது. அதோடு, தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்றும் (05.08.2024) நாளையும் (06.08.2024) பெரும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. 


இன்றைய நிலவரம்: (05.08.2024)


தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இன்றிரவு 08.30 வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளை (06.08.2024) கடலூர், விழுப்புரம், செங்கப்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. 


06.08.2024 / 07.08.2024 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னை வானிலை நிலவரம்:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும்(05.08.2024), நாளையும் (06.08.2024) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 8-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (04.08.2024) விடிய விடிய மழை பெய்தது. இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.