வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முழுமையாக கொண்டாட முடியாத அளவிற்கு பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

Continues below advertisement

தொடரும் மழை:

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் வங்க்கடலிலும், அரபிக்கடலிலும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று அறிவித்துள்ளனர். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

Continues below advertisement

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 

2 காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

தென்கிழக்கு அரபிககடலில் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 19.10.2025ம் நாளான நேற்று ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து  அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

புயல் அபாயமா?

ஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலால் சென்னை, வட தமிழகம் மற்றும் டெல்டாவில் கடுமையான தாக்கம் இருக்கும்.

அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் தமிழகத்தில் கடும் தாக்கம் இருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு கடலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புயல் ஏற்பட்டால் என்ன செய்வது? என்றும் மக்கள் கவலை கொண்டுள்ளனர். 

முன்னெச்சரிக்கை:

வானிலை ஆய்வு மைய அறிவிப்பைத் தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே புயல் உருவாகுமா? என்பது 23ம் தேதிக்குள் தெரிய வரும் என்று தெரிவித்துள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.