தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. திமுக தரப்பில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி என கூட்டணி வலுவாக உள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை:
ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் களமிறங்கியுள்ள அதிமுக கூட்டணியில் தற்சமயம் வரை பாஜக மட்டுமே மிகப்பெரிய கட்சியாக உள்ளது. தமக இந்த கூட்டணியில் இடம்பெற்றாலும், தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தையும் உள்ளே கொண்டு வர தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியது முதலே கூட்டணியில் பாமக-வை கொண்டு வர தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், ராமதாஸ் தலைமை - அன்புமணி தலைமை என பிளவுபட்டு இருக்கும் பாமக எந்த பக்கம் செல்வது என்று குழப்பத்தில் உள்ளது.
25 தொகுதிகள்:
இந்த சூழலில், தமிழக தேர்தல் பொறுப்பாளாக பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பைஜெயந்த் பாண்டாவிடம் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டுமானால் 25 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும், தேர்தல் செலவு குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
பாண்டா நிபந்தனை:
அன்புமணியின் 25 தொகுதிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பைஜெயந்த் பாண்டா, ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளார். தற்போது பிளவுபட்டுள்ள பாமக ஒருங்கிணைந்த பாமகவாக அதாவது, ராமதாஸ் ஆதரவுடன் கூட்டணிக்குள் வர வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட அன்புமணி, இந்த விவகாரத்தில் தனது தந்தை ராமதாஸ் முரண்பட்ட கருத்துடன் இருப்பதாகவும், அவரை சமாதானப்படுத்தினால் தனக்கொன்றும் சிரமம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாண்டாவிடம் 99 சதவீதம் பாமக-வினர் தன் பக்கமே இருப்பதாகவும், 1 சதவீதம் மட்டுமே ராமதாஸ் பக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனாலும், பாண்டா ராமதாஸிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அன்புமணி கேட்ட 1 ராஜ்யசபா எம்பி பதவியை கொடுப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியே தீர்மானிக்க முடியும் என்று பாண்டா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
தயக்கம் காட்டும் தவெக:
அதிமுக கூட்டணிக்குள் பாமக மட்டுமின்றி தேமுதிக மற்றும் தவெக-வை கொண்டு வரவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு கூட்டணிக்கு தயாராகியுள்ள தவெக பாஜக இடம்பெற்றிருப்பதால் அதிமுக-வுடன் கூட்டணி வைக்க தயக்கம் காட்டி வருகிறது.
ஆனாலும், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக தரப்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தவெக, தமாக ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருப்பதால் விரைவில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் எந்த பக்கம் இருப்பார்கள் என்பதை காணலாம்.