தமிழ்நாட்டில், பரவலாக மழை பெய்து வந்தாலும், ஒருபுறம் வெளியலும் சுட்டெரித்துதான் வருகிறது. இந்நிலையில், அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று திருவள்ளூர், கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழை இருக்குமா.? பார்க்கலாம்.
அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக் குறிப்பின்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை, 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 10 மாவட்டங்களில் கனமழை
இதேபோல், இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்டத்தில் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11.10.25
வரும் 11-ம் தேதி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரும்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
12.10.25
இதேபோல், வரும் 12-ம் தேதி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை இருக்குமா.?
சென்னையை பொறுத்தவரை, அவ்வப்போது மழை பெய்தாலும், வெயிலும் ஒருபுறம் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் பல இடங்களில் மிதமான அளவில் மழை பெய்த நிலையில், நேற்று வெயில் சுட்டெரித்தது.
இந்நிலையில், இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், ஓரிரு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி விமான நிலையம் பகுதிகளில் 3 சென்ட்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதேபோல், அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியிலும் 3 சென்ட்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.