TVK ADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற குமாரபாளையம் பரப்புரையில், பலரும் தவெக கொடியுடன் பங்கேற்றனர்.
அதிமுக கூட்டத்தில் தவெக கொடி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு முறை திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று பயணம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கூட்டத்திற்கு மத்தியில் பேசுகையில், அதிமுகவின் கொடிகள் மட்டுமின்றி சிலர் தவெகவின் கொடிகளையும் கையில் ஏந்தி அசைத்தபடி இருந்தனர்.
”தவெக - அதிமுக கூட்டணி, பிள்ளையார் சுழி போட்டாச்சு”
அப்போது, “திமுக தலைமையில் அமைக்கின்ற கூட்டணி வலுவான கூட்டணி என ஸ்டாலின் எண்ணுகிறார். உண்மையா? அது வெற்றுக் கூட்டணி. வெல்லும் கூட்டணி என்பது அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி. ஸ்டாலின் கூட்டணியை நம்பி இருக்கிறார். கூட்டணி தேவைதான், ஆனால் அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி வலுவானதாக இருக்கும். அங்க பாருங்க கொடி பறக்குது (தவெக கொடியை குறிப்பிட்டு), பிள்ளையார் சுழி போட்டாச்சு (தொண்டர்கள் ஆர்பரிப்பு). ஆகாயத்தில் கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள். அது கானல் நீராக தான் போகும்.
உங்கள் ஆட்சியில் மக்கள் கண்ட பலன் என்ன? துன்பம், துயரம், வேதனை இதை தானே மக்கள் கண்டார்கள். 53 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்கு என ஏதேனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினீர்களா?” என ஆளுங்கட்சியை கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தொலைபேசி உரையாடல்:
முன்னதாக, கரூர் சம்பவம் தொடர்பாக கடந்த 6ம் தேதி எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜயை தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது. அப்போது, கூட்டணி தொடர்பாகவும் இருவரும் பேசியதாகவும், இதுதொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகள் ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் அதிமுக மற்றும் தவெக இணைந்து செயல்பட வேண்டும் என, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் முன்னெடுப்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தவெக உடனான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் கூட்டணி கணக்குகளால் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.