தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை?
இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை முதல் மிக கனமழை:
கோவை மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழையும், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், விருதுநகர், மதுரை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் கோவை, தேனி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களின் கனமழை முதல் மிக கனமழை வரையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னைக்கு எப்படி?
இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை:
தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 14ம் தேதி வரை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று திருவண்ணாமலை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி துவாக்குடி, திண்டுக்கல் நத்தம், திருக்கோயிலூர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.