தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் ?
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 8 முதல் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து இந்த மேஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வார்டுகள் வாரியாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும். இதன்பின்பு, வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு 14 மேஜைகளில் வைக்கப்படும்.
மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 1374
போட்டியின்றி தேர்வானவர்கள்: 4
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 1370
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 11,196
நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 3843
போட்டியின்றி தேர்வானவர்கள்: 18
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 3825
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 17,922
பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 7609
போட்டியின்றி தேர்வானவர்கள்:196
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 7412
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 28,660
மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிட்டுள்ளனர். அந்தப் பதவிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியின் 8ஆவது வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் பேரூராட்சியின் 12 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 36ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் அங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரோடு அம்மாப்பேட்டை பேரூராட்சியில் வேட்பாளர் ஐயப்பன் மறைவால் தேர்தல் அங்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9ஆவது வார்டிலும் வேட்பாளர் மரணத்தால் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.