திருநங்கை கட்ரீனா தன்னைப்போன்ற திருநர் நிலைமை பற்றி ஒரு யூ ட்யூப் சேனலுக்கு மனம் திறந்த பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டி சமூகத்தின் பல அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.
”என் பெயர் கட்ரீனா. என் சொந்த ஊர் சேலம். இப்போ சென்னையில் இருக்கிறேன். என்னைப் போன்ற திருநங்கைகளின் மேம்பாட்டுக்கான அமைப்பில் இருக்கிறேன். திருநங்கைகளுக்கு பாலின சமத்துவம், உடல்நலம், தொழில்பயிற்சி என்று பலவகையில் வழிகாட்டும் பணியை செய்து வருகிறேன்.
ஆனால் இன்று நான் இன்றடைந்து நிலைக்குப் பின்னால் நிறைய வலிகள் இருக்கு. முதன்முதலில் 9வது படிக்கும்போது தான் என் பெண்மை எனக்கு ஆழமாகத் தெரிந்தது. வீட்டில் அதற்காக நிறைய அடி, உதை வாங்குவேன். அப்பா கடுமையாக தண்டிப்பார். நெருப்புக் கங்கில் மிளகாயைப்போட்டு அதை முகர்ந்து பார்க்கச் செய்து என் பாலின இயல்பை, பிரச்சினை என நினைத்து சரி செய்ய முயன்றார்கள். என்னுடைய பிரச்சினை அந்த ஊரில் யாருக்குமே புரியவில்லை. என்னை யாரும் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை. என் சகோதரியிடம் சொல்லிவிட்டு 10 வது முடித்தவுடன் வீட்டை விட்டுக்கிளம்பிச் சென்றேன். அப்போது என் எண்ணமெல்லாம் முழுமையாகப் பெண்ணாக வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது.
புதுச்சேரிக்குச் சென்றேன். அங்கே திருநங்கைகளை சந்தித்து உதவி கேட்டேன். முதன்முதலில் எனக்குப் பிடித்த மாதிரி பெண்கள் உடையணிந்து சுதந்திரமாக உணர்ந்தேன். ஆனால் ஏதோ வேலை கிடைக்கும் என நினைத்தால், கையில் மஞ்சள் துணி சுத்திய உண்டியல் கொடுத்து பிச்சை எடுக்கச் சொன்னார்கள். வீட்டில் பெரிய வசதியில்லாவிட்டாலும் கவுரவமாகவே வாழ்ந்தோம்.
பிச்சை எடுப்பது சுயமரியாதையை சுட்டது. ஆனால் பிழைப்புக்கு வேறு என்ன செய்ய முடியும் என்பதால் பிச்சை எடுத்தேன். அப்புறம் கொஞ்சம் வயதானதும் ரொம்பவே அழகாக இருந்தேன். என்னைத் தேடி நிறைய ஆண்கள் வர ஆரம்பித்தனர். அப்படியே பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன். கத்தியைக் காட்டி மிரட்டி புணர்ச்சி செய்வார்கள். ஒவ்வொரு நாள் இரவும் கண்ணீருடன்தான் முடியும். அதை யாரும் கண்டு கொள்வதாக இல்லை. அங்கே உள்ள திருநங்கைகள் சாயுங்காலம் ஆனவுடனேயே குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனக்கு சுத்தமாக அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. கொஞ்சம் சம்பாத்தியம் செய்து ஒரு நோக்கிய போன் வாங்கி வைத்திருந்தேன். அதை மட்டும் எடுத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டேன். இங்கும் பெரிதாக நிலைமை மாறவில்லை. அதே பாலியல் தொழில் துரத்தியது. ஆனால் புதுச்சேரியை ஒப்பிடும்போது இங்குள்ள ஆண்கள் கொஞ்சம் தயவு காட்டினார்கள். இங்கே அடி உதை வன்புணர்ச்சியெல்லாம் பெரும்பாலும் இல்லை.
வெகு சிலரே முரட்டுத்தனமும், மோசமான வார்த்தைகளுமாக வேதனைப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து மும்பைக்குப் புறப்பட்டேன். மும்பை ரயில் ஏறினேன். அங்கு இறங்கினால் எனக்கு இந்தி தெரியாது. அங்கிருந்தவர்களுக்கு தமிழும் தெரியாது நிறைய பேருக்கு ஆங்கிலமும் தெரியவில்லை. நான் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேசினேன். அப்புறம் அங்குள்ள திருநங்கைகளிடம் தஞ்சம் புகுந்தேன். எனக்கு அவர்கள் அடைக்கலம் கொடுத்தார்கள். மகாராஷ்டிராவில் குறிப்பாக புனேவில் திருநங்கைகளுக்கு நல்ல மரியாதை இருந்தது. அங்கு கடைகளில் சென்று காணிக்கை கேட்போம் ஆசிர்வதிப்போம். முகம் சுளிக்காமல் பணம் தருவார்கள். வீடுகளில் விசேஷ நிகழ்ச்சிகளில் கூப்பிட்டு மரியாதை செய்வார்கள். சேலை வாங்கித் தருவார்கள். ஆண், பெண் அனைவருமே எங்களை கண்ணியமாகத்தான் நடத்துவார்கள்.
இளைஞர்கள் கூட எங்களை பாலியல் ரீதியாக மட்டுமே அணுக மாட்டார்கள். பாலியல் தொழிலை விரும்பினால் செய்யலாமே தவிர யாரும் தள்ளப்படுவதில்லை. இந்த விஷயத்தில் புதுச்சேரி, சென்னையை விட மும்பை எவ்வளவோ மேல்.
ஒரு பாலியல் தொழிலாளியாக நான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. இப்போது திருநங்கை சமூகத்திற்கான பணியில் ஈடுபட்டு சம்பாதிக்கிறேன். வீடு கட்டியுள்ளேன். சொந்த ஊரில் கூட ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனக்கு காதல் திருமணம் நடந்துவிட்டது. கணவர் இதுவரை பாசமாகவே இருக்கிறார். ஆனால், எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. திருநங்கைகள் திருமணம் சோகத்தில்தான் முடியும் என்பார்கள். அதனால் எதிர்பார்ப்பு இல்லை. இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாளையே பிரிவு நேர்ந்தால்.. அதையும் கடந்து போவேன்”.
இவ்வாறு தனது வாழ்க்கைப் பயணம் பற்றி கட்ரீனா கூறியுள்ளார்.