விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம். சித்தாமூர் கள்ளச்சாரயம் மரண வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கள்ளச்சாரயம் அருந்தி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம்  எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து முண்டியம்பாக்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் கடலூர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சார்ந்த ஆட்சியர் எஸ்பிக்கள் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோருடன் சட்ட ஒழுங்கு மற்றும் கள்ளச்சாராய தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர்.


11 பேர் கொண்ட மருத்துவ குழு


விஷ சாராயம் அருந்தி முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க 11 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்களும், மருந்துகளும் போதிய அளவிற்கு இருப்பதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன், எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் பாதிக்கபட்டு 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பாதிப்பிற்குள்ளானவர்களை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு திருவண்ணாமலை, ஸ்டான்லி, சேலம் மருத்துவமனைகளிலிருந்து சிறப்பு மருத்துவ குழு வருகை புரிந்து மருத்துவம் செய்து கொண்டிருப்பதாகவும், சாராயம் அருந்திய 8 பேருக்கு மருத்துவமனையில் டயாலிசிலிஸ் செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவர் லதா, லட்சுமணர் ஆகிய இருவரின் தலைமையில் 11 பேர் கொண்ட மருத்துவ குழு சிறப்பு சிகிச்சை 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ள வளாகமாக முண்டியம்பாக்கம்  மருத்துவமனை உள்ளதாகவும், மருத்துவர்களும், மருந்துகளும் போதிய அளவிற்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.


பணி நீக்கம் மற்றும் பணி மாற்றம்

 

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து நான்கு பேர் பலியான விவகாரம் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு பிரிவை சேர்ந்த  செங்கல்பட்டு  துணைக் கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

டி.ஜி.பி. விளக்கம்:

மரக்காணத்தில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்றும், அதை குடித்ததே உயிரிழப்பிற்கு காரணம் என்றும் தமிழக டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். சித்தாமூர் மற்றும் மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச்சாராயம் ஓரிடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் டி.ஜி.பி. கூறியுள்ளார்.  மேலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிருந்து, விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தத் தொழிற்சாலையிலிருந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது என்றும் டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.