கடந்த 2018ம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் தேசிய அளவிலான சீனியர் மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தியாவில் மகளிர் கால்பந்தில் கோலோச்சி, 18 முறை சாம்பியன் பட்டம் வென்ற மணிப்பூர் மகளிர் அணியை தமிழ்நாடு மகளிர் அணியினர் இறுதிப்போட்டியில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். ஆனால், மிகப்பெரும் சாதனையைப் படைத்த தமிழ்நாடு மகளிர் அணிக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்காமல் இருந்தது. இது தொடர்பாக அப்போது ஆட்சியில் இருந்து அதிமுக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டும் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.


 






இந்நிலையில், ஐ.எஸ்.எல். லீக் போட்டிகள் தொடங்கவிருந்த நிலையில், தமிழ்நாடு மகளிர் அணிக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஏபிபி நாடு செய்தி நிறுவனமும் மகளிர் கால்பந்து அணியினரின் நியாயமான கோரிக்கையை செய்தியாக வெளியிட்டது. இது குறித்து உடனடியாக பதிலளித்த மன்னார்குடி  எம்.எல்.ஏ. TRB ராஜா, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.






இந்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வி. மெய்யநாதன் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியினருக்கான ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பதிலில், “ வணக்கம் மனோஜ். எஸ்.டி.ஏ.டி. மகளிர் மூத்த தேசியக்குழுவின் திறமையை கண்டறிந்துள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட குழு தற்போது நாமக்கல்லில் பயிற்சி முகாமில் உள்ளது. 2018ல் மூத்த தேசிய வெற்றியாளர் கோப்பையை எங்கள் மகளிர் அணி கைப்பற்றியது. அந்தநேரத்தில் முறையாக அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால், தற்போதைய அரசு  இந்த அணியை திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் மகிமையுடனும் மிளிரச்செய்யும்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




மேலும், அவர் மகளிர் கால்பந்து அணியினருக்கான ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார். அணியில் உள்ள வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1.38 லட்சம் வீதம் மொத்தமாக ரூபாய் 25 லட்சம் தமிழ்நாடு அணிக்கு ஊக்கத்தொகையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியில் குரூப் சி பதவிகளில் பணிகள் வழங்கப்படுகிறது. மேற்கண்ட தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியினருக்கும். அரசுப்பணி வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு சிறப்பு நிகழ்வாக எடுத்துச்செல்லப்பட்டு, உதவிபுரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண