திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் நேற்று இரவு இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை திருடி சென்றதை பார்த்துள்ளார்.இதனையடுத்து அவர்களை பிடிக்க எஸ்எஸ்ஐ பூமிநாதன் முயன்றபோது  அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் அவர்களைத் துரத்திப் பிடிக்க பூமிநாதன் முயன்றுள்ளார்.
ஆனால் பூமிநாதன் பிடியில் சிக்காமல் திருச்சி மாவட்டத்தை கடந்த கொள்ளையர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி எனும் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை அருகே வந்துள்ளனர். அந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அதைத் தாண்டி செல்ல வழியில்லாமல் அங்கு நின்று உள்ளனர்.


இதனையடுத்து அவர்களை பின்தொடர்ந்து வந்த எஸ்எஸ்ஐ பூமிநாதன் ஆடு திருட்டு கொள்ளையர்களை பிடிக்க முயன்று உள்ளார்.அப்போது கொள்ளையர்கள் இருவரும் எஸ்எஸ்ஐ பூமியைநாதனை கடுமையாகத் தாக்கியதோடு மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.


இச்சம்பவம் இரவு இரண்டு மணிக்கு நடந்ததாகக் கருதப்படும் நிலையில் காலை 4 மணி அளவில் இதனை அப்பகுதி மக்கள் இதனை பார்த்துவிட்டு கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த கீரனூர் போலீசார் பூமிநாதன் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி டிஐஜி சரவண சுந்தர் எஸ்பி சுஜித்குமார் ஆகியோரும் எஸ் எஸ் ஐ பூமிநாதன் கொலைச் சம்பவம் குறித்தும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன், இலுப்பூர் டிஎஸ்பி அருள்மொழி அரசு ஆகியோர் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இரண்டு எஸ்ஐகள் உள்ளடங்கிய 4 தனிப்படை களையும் போலீசார் அமைத்து சிசிடிவி கேமரா உதவியோடு கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆட்டு திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க சென்ற சிறப்பு  உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில் மர்ம கும்பலின் தாக்குதலில் உயிரிழந்த போலீசார் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதலை தெரிவித்துள்ளார். மேலும் ரூ1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்