10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 


கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறையத் தொடங்கியதையடுத்து கல்வி நிலையங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கியுள்ளன. கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், கற்றல் இடைவெளியைப் போக்க எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, பாடம் ஆசிரியர்கள்வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


நவம்பர் 1ம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் குறித்தும், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.


காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்தாண்டு நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். அதேசமயம்  டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண