தமிழ்நாடு உள்ளுறை ஆணையர் பதவியில் ஜக்மோகன் சிங் ராஜூ ஐஏஎஸ் பதவி வகித்து வந்தார். அவர் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணி செய்து வந்தார். இவர் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இந்த பணியில் இருந்து வந்தார். இந்தச் சூழலில் கடந்த 25ஆம் தேதி இவர் தன்னுடைய பதவியிலிருந்து விருப்பு ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். அத்துடன் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடித்தத்தில், “என்னுடைய சொந்த மாநிலமான பஞ்சாப்பில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள் எனக்கு பெரும் வேதனை அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தன. அந்த மண்ணின் மைந்தன் என்று இருந்தாலும் என்னுடைய பணியின் விதிமுறைகளால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இதன்காரணமாக என்னுடைய அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு என்னுடைய சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தொடர்ந்து இருந்து வந்தது.
2023ஆம் ஆண்டு என்னுடைய பணி காலத்திற்கு பிறகு பஞ்சாப் செல்வதா அல்லது தற்போதே ராஜினாமா செய்துவிட்டு அங்கு செல்வதா என்ற குழப்பம் எனக்குள் இருந்து வந்தது. ஆனால் நீங்கள் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழ் மக்களுக்காக மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்காக செய்யும் செயல்கள் எனக்கு மிகவும் பிடித்தது. மேலும் உங்களுடைய செயல் எனக்குள் இருந்த குழப்பத்தை தெளிவு படுத்த முக்கிய காரணமாக அமைந்தது. உங்களுடைய பாதையில் சொந்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அத்துடன் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பெரியாரின் பிறந்தநாள் அன்று நீங்கள் எடுக்க வைத்த சமூகநீதி உறுதிமொழி எனக்கு பெரிய தைரியம் மற்றும் மன உறுதியையும் தந்தது.
இதன்காரணமாக என்னுடைய பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று நான் மீண்டும் பஞ்சாப் திரும்ப உள்ளேன். அங்கு சென்று என்னுடைய மக்களுக்கு சேவை செய்ய உள்ளேன். கடந்த 1985ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தவுடன் 22 வயது இளைஞராக என்னுடைய மாநிலத்தை விட்டு வெளியேறினேன். அதன்பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து 36 ஆண்டுக்காலம் நான் பணி செய்தேன். என்னுடைய பணி காலம் முழுவதும் சீக்கிய மதக்குருக்களின் போதனை படியும், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் வழி காட்டுதல் படியும் சிறப்பாக மக்கள் பணி செய்தேன். என்னை உங்கள் தலைமையிலான அரசில் பணி செய்ய தேர்வு செய்தற்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு ஜக்மோகன் சிங் வரும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக அவர் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிப்ரவரி 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? ஆலோசனைக் கூட்டத்தில் பரிந்துரை என தகவல்