தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 25) ரேஷன் கடைகள் இயங்காது என்பதால் பொதுமக்கள் இன்று பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகள் சார்பில் தமிழ்நாட்டில் கிட்டதட்ட 35 ஆயிரத்துக்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பண்டிகை நாட்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக கடை திறந்திருக்கும் நாட்களில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் குறிப்பிட்ட கடைகள் வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்கள் பிரிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டு வந்தது. 


இதனிடையே நடப்பாண்டு தீபாவளி பண்டிகை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இப்பண்டிகை வந்த நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி,  பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் நவம்பர் 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவம்பர் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறையின்றி ரேஷன் கடைகள் செயல்பட்டது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்று தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். 


இப்படியான நிலையில் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 13 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை (நவம்பர் 25) ரேஷன் கடைகள் செயல்படாது. எனவே பொதுமக்கள் தங்கள் தேவையான பொருட்களை இன்று பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.