கனமழை பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது தீவிரம் அடைந்துள்ளது. முன்னதாக குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மழையானது தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இப்படியான நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் (நவம்பர் 22) இரவு கனமழையால் பெய்தது. குறிப்பாக கோத்தகிரி, குன்னூரில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி இடையே குஞ்சப்பனை பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்ட நிலையில் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றது. கிட்டதட்ட 10 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து துவங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் குன்னூர், கோத்தகிரி தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். பிற பகுதிகளில் மழை குறைந்ததால் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பகுதிகளில் கனமழை சேதம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், தேவைப்படும் பட்சத்தில் விடுமுறை விடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரத்து செய்யப்பட்ட மலை ரயில் சேவை
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில்பாதை தண்டவாளத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாறைகள் மற்றும் மரங்கள் உருண்டு விழுந்தது. இதன் காரணமாக மலை ரயில் சேவை நாளை (நவம்பர் 25) வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கும் கட்டணங்கள் திரும்ப வழங்கப்பட்டது.