தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு  தனித்தனி ரசீது வழங்கும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 


இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் முதுநிலை மண்டல மண்டல மேளாளர் சார்பில் அனைத்து வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பப்பட்டுள்ளது. 


அதில் பொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பி.எச்.எச் எனப்படும் முன்னுரிமை குடும்ப அட்டை, ஏ.ஏ.ஒய் எனப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா  அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் போது அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 2வது ரசீதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பி.எச்.எச் அட்டைதாரர்கள் 


அதன்படி இன்று முதல் பி.எச்.எச் எனப்படும் முன்னுரிமை குடும்ப அட்டை, ஏ.ஏ.ஒய் எனப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா  அட்டைதாரர்களுக்கு புதிய முறைப்படி அரிசி மட்டும் மத்திய, மாநில அரசுகளின்  ஒதுக்கீட்டின் படி 2 ரசீதாக பதிவு செய்யப்படும். பி.எச்.எச் கார்டுகளுக்கு அரிசி ஒதுக்கீடு 12 கிலோவாக இருக்கும் நிலையில், புதிய விதிகளின்படி 5 கிலோ அரிசி மத்திய அரசு சார்பிலும், 7 கிலோ மாநில அரசு சார்பிலும் வழங்கப்படும்.


ஒருவேளை அரிசி ஒதுக்கீடு 14 கிலோவாக இருந்தால்,  மத்திய அரசு 10 கிலோவும், மாநில அரசு 4 கிலோ அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்கும். மேலும் 16 கிலோவாக இருந்தால், 10 கிலோவை மத்திய அரசும், 6 கிலோ மாநில அரசின் ஒதுக்கீட்டிலும் வழங்கப்படும்.  18 கிலோவாக இருக்கும் பட்சத்தில் 15 கிலோவை மத்திய அரசும், 3 கிலோ அரிசி மற்றும் இதர பொருட்களை மாநில அரசும் வழங்கும். 


20 கிலோவாக இருக்கும்போது (அலகு 3- பெரியவர்-2, சிறியவர்-2) 15 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 5 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்க வேண்டும். அதேசமயம் 20 கிலோ (அலகு-4), 25 கிலோ, 30 கிலோ, 35 கிலோவாக இருக்கும் பட்சத்தில் அரிசி மொத்த அளவையும் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் வழங்கி, இதர பொருட்களை மாநில அரசின் ஒதுக்கீட்டில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏ.ஏ.ஒய் அட்டைதாரர்கள் 


ஏ.ஏ.ஒய் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 கிலோ அரிசியையும் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் வழங்கி, இதர பொருட்களை மாநில அரசின் ஒதுக்கீட்டில் வழங்க வேண்டும். மேலும் இந்த அட்டைதாரர்கள் கோதுமை பெற விரும்பினால் புதிய முறைப்படி, மத்திய அரசின் தொகுப்பில் முதல் ரசீது அளவுக்கு உட்பட்ட இருப்புக்கு ஏற்றவாறு கோதுமை மற்றும் அரிசி பகிர்ந்து வழங்கலாம். 


மேலும் என்.பி.எச்.எச் எனப்படும் முன்னுரிமை அல்லாத கார்டுதாரர்களுக்கு எந்தவித மாற்றமுமின்றி பழைய முறையே பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய முறைகளை பின்பற்றாமல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டால் அதற்கு உண்டான வேறுபாட்டு தொகையை செலுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.