ஏபிபி நாடு வாழ்த்து:
நன்மை, தீமை, வாழ்கைக்கு தேவையான புதிய அனுபவங்கள், கொரோனாவிலிருந்து மீண்டது, உக்ரைன் - ரஷ்ய போர் என, இதுவரை கிடைக்காத பல புதுப்புது அனுபவங்களையும், எதிர்கொள்ளவே கூடாத சில மோசமான நினைவுகளையும் 2022ம் ஆண்டு நமக்கு கண் முன் காட்டியுள்ளது.
அதிலிருந்து கிடைத்த படிப்பினைகளை பயன்படுத்தி, வாழ்க்கையில் விரும்பிய அனைத்தையும் பெற வாசகர்களுக்கு ABP நாடு வாழ்த்துகளை தெரிவிக்கிறது. பணம் என்பதையும் தாண்டி, வாழ்வின் முக்கிய செல்வமான மன மற்றும் உடல்நலன் அனைவருக்கும் கிடைத்திடவும், வாசகர்கள் மனமகிழ்ந்து வாழ்ந்திடவும், வாழ்வில் மென்மேலும் வளர்ந்திடவும் ABP நாடு நிறுவனம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
களைகட்டும் கொண்டாட்டம்:
இந்திய மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். கேக் வெட்டி, இனிப்புகளை பகிர்ந்து. பட்டாசுகளை வெடித்து, வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து, பாடல்களை பாடியும், சக நண்பர்களை கட்டியணைத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர். விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை கூடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அங்கு ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டையொட்டி நள்ளிரவிலேயே ஏராளமான பக்தர்கள் அருகிலிருந்த கோயில்களுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்றும் சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதையொட்டி, HAPPY NEWYEAR 2023 என்ற ஹேஷ்டேக்கும் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களும், பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை தொடர்ந்து பல நாடுகளும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வரும் நிலையில், உலக அளவில் கடைசியாக அமெரிக்காவிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் வசிக்காத தீவுகளான, பேக்கர் ஐ-லேண்ட் மற்றும் ஹவுலேண்ட் ஆகிய தீவுகளில், இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது.