Rajyasabha MP Election: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்புமணிக்கு மீண்டும் பதவி கிடைக்குமா? என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு:
தமிழ்நாடு சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை முன்னிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுலை 24ம் தேதியுடன் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதோடு அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைய உள்ளது. இதையடுத்து காலியான பதவிகளுக்கான தேர்தல் முன்கூட்டியே ஜுன் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை இடங்கள்:
நாடாளுமன்றத்தில் மொத்தம் 545 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 39 உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரம், ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களால் வாக்களித்து தேர்தெடுக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டிற்கு அந்த வகையில் மொத்தம் 18 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு தான் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறுவது எப்படி?
ஒவ்வொரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்தெடுக்கவும் 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியம். அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது திமுக கூட்டணிக்கு மொத்தம் 159 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. இதன் மூலம் காலியாக உள்ள 6 இடங்களில் 4 இடங்களை திமுக எளிதில் கைப்பற்றும். மறுமுனையில் அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 75 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதனடிப்படையில் அக்கட்சி இரண்டு எம்.பிக்களை தன்வசப்படுத்தும். காலியான பதவிகளுக்கு புதியதாக 6 பேர் மட்டும் விண்ணப்பித்தால், போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். கூடுதலாக யாரேனும் விண்ணப்பித்தால் போட்டி நடைபெறும். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.
திமுகவின் வேட்பாளர்கள் யார்?
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி வென்ற வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியாக கூறப்படுகிறது. வயது மூப்பு காரணமாக வைகோவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, அவரது இடம் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுபான்மை சமூக வாக்குகளை பெறும் நோக்கில் எம்.எம்.அப்துல்லாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் அல்லது அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கு வாய்ப்பு ஒதுக்கப்படலாம் என கருதப்படுகிறது. தொமுச பேரவைத் தலைவர் சண்முகத்திற்கான மறுவாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.
அன்புமணிக்கு கல்தா கொடுக்கும் அதிமுக?
அதிமுகவிற்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி உள்ளன. அதில் ஏற்கனவே தங்களது ஆதரவு மூலம் எம்.பி., ஆன அன்புமணிக்கான வாய்ப்பும் உண்டு. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என ராமதாஸ் முரண்டு பிடிப்பதால், அதிமுக - பாஜக - பாமக கூட்டணி குறித்து அறிவிப்பு ஏதும் தற்போது வரை இல்லை. இதனால், அதிமுகவின் ஆதரவு அன்புமணிக்கு கிடைக்காது என கூறப்படுகிறது. அதன்படி, அன்புமணி இந்த முறை மீண்டும் மக்களவை உறுப்பினர் ஆக முடியாது என தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாமகவிற்கு சட்டமன்றத்தில் வெறும் 5 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிகவை அணைக்குமா அதிமுக?
பாமகவின் கூட்டணி முடிவு ஊசலாடி வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி அதிமுக தங்களுக்கு மாநிலங்களவை சீட்டை ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தி வருகிறது. அப்படி நடந்தால் தான் கூட்டணியில் தொடரவும் அக்கட்சி முடிவு செய்துள்ளதாம். ஆனால், அப்படி வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தேமுதிகவிற்கு அதிமுக மாநிலங்களவை சீட்டை கொடுக்குமா? அல்லது தங்களது சொந்த கட்சியினருக்கே இரண்டு பதவிகளையும் அதிமுக வழங்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.