வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் பாண்டிச்சேரியையும், வட தமிழகத்தையும் சிதைத்துவிட்டது என்றே கூற வேண்டும். இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில தினங்களாகவே மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், புயல் உருவான வெள்ள மற்றும் புயல் கரையை கடந்த சனிக்கிழமை மழை கொட்டித் தீர்த்தது.


ஃபெஞ்சலால் பெய்த பேய் மழை:


ஃபெஞ்சல் புயல் முதலில் டெல்டா மாவட்டத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், பின்னர் சென்னை மாமல்லபுரம் – பாண்டிச்சேரி இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால், சென்னையில் பெருமழை எதிர்பார்க்கப்பட்டது.


புயல் பாண்டிச்சேரி அருகே கரையை கடந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. விழுப்புரத்தின் மயிலத்தில் மட்டும் 50 செ.மீட்டர் மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. ஒரே நாளில் 50 செ.மீட்டர் மழை பெய்ததால் ஒட்டுமொத்த விழுப்புரமும் ஸ்தம்பித்தது. விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் என மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது.


கரைபுரண்டு ஓடும் வெள்ளம்:


இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். விழுப்புரம் பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. திண்டிவனத்தின் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.


சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய சுங்கச்சாவடியான விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மழைநீரில் முழுவதும் மூழ்கியுள்ளது. அந்த சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதியில் ரயில் தண்டவாளங்கள் மூழ்கியிருப்பதால் அந்த வழித்தடத்தில் வரும் ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.


இயல்பு வாழ்க்கை பாதிப்பு:


விழுப்புரம் மட்டுமின்றி கடலூர் மாவட்டமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய ஆறான தென்பெண்ணை ஆறு நிரம்பி கடலூர் மாவட்டத்தின் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்களை பேரிடர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.


விழுப்புரம், கடலூர் மட்டுமின்றி திருவண்ணாமலையிலும் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ளே மழைநீர் புகுந்துள்ளது. முழங்கால் அளவு தண்ணீர் கோயிலில் தேங்கி நிற்கிறது. திருவண்ணாமலையின் முக்கிய நீர்நிலைான சாத்தனூர் அணை நிரம்பி தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.


திருவண்ணாமலையில் கனமழை காரணமாக பாறை உருண்டு விழுந்து வீட்டின் மீது விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளியில் நேற்று ஒரே நாளில் 24 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.


வட தமிழகத்தின் பல மாவட்டங்களும் தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில் அரசு பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. அதேசமயம் தண்ணீர் இன்னும் வடியாததால் மக்கள் இயல்பு வாழ்க்கைகை்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.