Schools Colleges Holiday ( 02-12-2024): ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், எங்கெங்கு இன்று அளிக்கப்பட்டுள்ளது என கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.


10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:


கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


மேலும், ராணிப்பேட்டை, சேலம், வேலூர், தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடயே, புதுச்சேரியிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கனமழை எச்சரிக்கை:


ஃபெஞ்சல் புயலானது காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ந்து சென்றது. இதனால் விழுப்புரத்தில்  அதிகனமழையானது கொட்டித் தீர்த்தது. மேலும் , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து , திருவண்ணாமலை நோக்கி சென்று விட்டது. இருப்பினும் கரையை கடந்த பிறகும் வலுவிழக்காமல் தொடர்ந்து நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் எனவும், இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


மீட்பு பணிகள் தீவிரம்:


இந்நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் அதீத வேக காற்று மழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின.இதனால் சில சாலைகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் , வெள்ளநீரால் விழுப்புரம் -செஞ்சி இடையிலான சாலைப் போக்குவரத்தானது பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  இதையடுத்து, அங்கு வெள்ள நிவாரண பணிகளில் அரசாங்கம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேநேரம், திருவண்ணாமலையில் வீடு திடிரென மண்ணில் புதைந்தை அடுத்து, அதிலிருந்த 7 பேரை மீட்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.