தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையில் மழை குறைய வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். தமிழகத்தின் உள்பகுதி, மேற்கு தமிழகம், தென் தமிழகத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்திற்கு ஒரு பெரிய நாள். கடந்த 2 நாட்களை விட சென்னையில் மழை குறைய வாய்ப்புள்ளது. மேலும் இன்று இரவு மேகங்கள் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம். மன்னார் வளைகுடாவில் சுழல் உருவாகலாம் மற்றும் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யலாம். ஆனால் மொத்தமாக சென்னைக்கு மேல் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும். எனவே திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலூர் - டெல்டா
டெல்டா முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் நல்ல மழை பெய்து, கடலூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இன்னும் சில நேரம் மழை தொடரலாம். தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் குமரியின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனப்பதிவிட்டுள்ளார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்