வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சென்னை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடர் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொமரின், தெற்கு கடலோர தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் என்பதால்,மேற்குறிப்பிட்ட காலத்திற்கு மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் கனமழை குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், சென்னையில் ஒரு மாதத்தில் 1000 மி.மீ.,அளவை கடப்பது இது 4-வது முறையாகவும், கடந்த 200 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் மட்டும் 1000 மி.மீ.,அளவை கடப்பது 3வது முறையாகவும் பதிவாகியுள்ளது.
1088 mm - நவம்பர் 1918
1078 mm - அக்டோபர் 2005
1049 mm - நவம்பர் 2015
1003 mm - நவம்பர் 2021 (27 நவம்பர் - 7.30 pm நிலவரப்படி) இது தான் இந்த ஆண்டுக்கான தீவிர கனமழையின் நிலை என்றும் கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்